தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியது: ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை ஒன்றாக சேர்த்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு இதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 20ம் தேதி நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு அமைச்சர் விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் தந்ததும் இது சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: