மேல்புவனகிரி அருகே இரண்டே ஆண்டுகளில் பஞ்சரான தார்சாலை

சேத்தியாத்தோப்பு : மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுவானைமேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மதுவானைமேடு கிராமத்தில்  இருந்து நகர பகுதிக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் தார்சாலையை அமைத்ததால் இரண்டே ஆண்டுகளில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயகற்ற நிலைக்கு மாறியுள்ளது.

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமம் கடைகோடியில் அமைந்துள்ளதால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. கிராம மக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விஷ பூச்சிகள் கடித்து பாதிப்பு ஏற்பட்டாலோ இந்த கரடு முரடான சாலை வழியாகத்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றோம்.

 இது போன்ற நிலையில் பாதி வழியிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்படுகின்றது. கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் மிதிவண்டி, இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் தடுமாறி விழுந்து காயமடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

 எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலையை ஆய்வு செய்து சாலையை அகலபடுத்தி மீண்டும் தரமான புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: