திமுகவை பற்றி விமர்சிக்க கமல்ஹாசனுக்கு தகுதியில்லை-சிங்காநல்லூர் வேட்பாளர் நா.கார்த்திக் கண்டனம்

கோவை :  கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் நா.கார்த்திக் போட்டியிடுகிறார். இவர், நேற்று  சித்தாபுதூர் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து நேற்று பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, அப்பகுதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மோடி கோவை வந்த போது, சிறு குறு தொழில் நிறுவனங்களை சந்தித்தாரே, அவர்களுக்கு என்ன செய்தார். பல ஆயிரக்கணக்கான தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். எதற்கும் பயனற்ற பா.ஜ.வுடன் அ.தி.மு.க.வினர் கூட்டணியிட்டுள்ளனர். மக்களுக்காக இந்த பகுதியில் அ.தி.மு.க. அரசில் என்ன பணிகள் செய்யப்பட்டன. மக்களை திரட்டி மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்தும்கூட மக்கள் பணிகளை செய்ய தவறி விட்டனர்.  மக்கள் பிரச்சினைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்திய  என் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை அ.தி.மு.க.வினர் போட்டனர்.

சொத்து வரி உயர்வை கொண்டு வந்தபோது, தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தி தான் சொத்து வரி உயர்வை நிறுத்தினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரியை உயர்த்த மாட்டோம்.  மக்களுக்காக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.. அப்படி இருக்கையில், தி.மு.க.வை பற்றி விமர்சனம் செய்ய நடிகர் கமலுக்கு என்ன தகுதி உள்ளது. இந்த பகுதியில் தி.மு.க. சார்பில் எதுவும் செய்யவில்லை என கூறி உள்ளார். தேர்தலுக்காக மட்டுமே மக்களை சந்திக்க வந்த இவருக்கு என்ன தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மாலையில் 55வது வார்டுக்கு உட்பட்ட பழையூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது, ம.தி.மு.க. சூரி நந்தகோபால்,  தனபால், இந்திய கம்யூ., சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கியன், பசீர் அகமது, ஜெம்பாபு, கிதார்முகமது, முன்னாள் மேயர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் முருகன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் மா.செல்வராஜ், மனோகரன், ராஜா, சுந்தரர் பகுதி பொறுப்பாளர்கள் சாமி, நாகராஜ், சேக் அப்துல்லா, வட்ட செயலாளர் சசிகுமார், கணபதி தினேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: