டெல்லியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

தாராபுரம்: ‘‘டெல்லியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்’’ என கனிமொழி எம்.பி. நேற்று பேசினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் திமுக மாநில மகளிரணி தலைவி கனிமொழி  எம்.பி. நேற்று பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக பாஜ ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. பாஜவுக்கு பினாமியாக அதிமுக ஆட்சி உள்ளது. தமிழகத்தின் சுயமரியாதையை, அடையாளங்களை டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால்தான் நீங்கள் மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெறமுடியும்.

சமஸ்கிருதத்தை யாரும் சொல்லித்தர மாட்டார்கள். சிலர் மட்டுமே படிப்பார்கள். அவர்கள் மட்டும்தான் டாக்டராக முடியும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி நம் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் நிலைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். ஆனால் இன்று நீட் தேர்வை கொண்டு வந்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்.  பாஜ கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் இனி எந்த கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

நம் வீட்டு இளைஞர்கள் இளம்பெண்கள் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறார்கள். எனவே, தமிழகத்தை டெல்லியின் பிடியிலிருந்து மீட்டெடுக்க இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: