சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுவில் ேபாலி கையெழுத்து: திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவில் கூட்டணியில் பாமக சார்பில் கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இதே போல நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஜெயசிம்ம ராஜா என்பவர் போட்டியிடுகிறார். ஜெயசிம்ம ராஜாவினுடைய வேட்பு மனுவில் சாதிக் பாட்ஷா என்பவர் கையெழுத்து போட்டு முன்மொழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தனது கையெழுத்து இல்லை. போலியாக போடப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சாதிக் பாட்ஷா என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் சரவணன் அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை முன்மொழிந்துள்ளோர் பட்டியலில் எட்டாவதாக இருக்கக்கூடிய சாதிக் பாட்ஷா என்பவரின் கையெழுத்தை மோசடியாக போட்டுள்ளனர். ஆனால், சாதிக் பாட்ஷா அவ்வாறு தான் முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று மறுத்துள்ளார். ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து தெரியவந்தவுடன் நாங்கள் இந்த போலி கையெழுத்து குறித்து புகார் அளித்துள்ளோம். இந்த புகாரின் பேரில் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த மோசடி குறித்து காவல்துறை விசாரணைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: