7 உட்பிரிவுகளை இணைக்கும் தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிப்பு

சென்னை: ஏழு உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என அழைப்பதற்காக தமிழக அரசு பரிந்துரை செய்த, ‘தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா,’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை ஒன்றாக சேர்த்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு சமீபத்தில் பரிந்துரை செய்தது. தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, இந்த 7 உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த மாதம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் பங்கேற்று பேசினர். பின்னர், விவாதத்துக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் பேசுகையில், ``இந்த திருத்தங்கள் குறித்து பதிவாளர் ஜெனரலுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மட்டுமின்றி, இலவச சட்ட ஆலோசனையும் மத்திய அரசு வழங்கி வருகிறது,’’ என்றார்.  

பின்னர், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இது மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related Stories: