துணை முதல்வர் ஓ.பழனிசாமி: மறுபடியும் ‘‘ஆரம்பிச்சுட்டாரு’’ திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: .திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கனவே பொது கூட்டங்களில் உளறி கொட்டி வந்த திண்டுக்கல் சீனிவாசன் தற்போது தேர்தல் பிரசாரத்திலும், ‘‘‘‘உங்க புருஷன் வெளியூர் போய்ட்டா கவலைப்படாதீங்க... நாங்க இருக்கிறோம்..’’, ‘‘ஒரு சிலிண்டர் விலை ரூ.4500’’ என அடுத்தடுத்து பேசி மக்களை மிரள வைக்கிறார். இது நேற்றும் தொடர்ந்தது. சீனிவாசன் திண்டுக்கல்லில் உள்ள ரவுண்ட்ரோடு புதூர், குள்ளனம்பட்டி, அனுமந்தநகர், மேற்கு மரியநாதபுரம், ஓய்எம்ஆர் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.

ஓய்எம்ஆர் பட்டி பகுதியில் பிரசாரம் செய்யும்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்பதற்கு பதிலாக ‘‘துணை முதல்வர் ஓ.பழனிசாமி’’ என முதல்வர் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதை கேட்டு கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பிரசாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அவரது வாகனத்தில் 15க்கும் மேற்பட்டோர் தொங்கியபடி வந்தனர். அதேபோல் ரவுண்ட் புதூரில் பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் பணம் பெறுவதற்காக டோக்கன்களுடன் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் பிரசாரத்திற்கு அழைத்து வந்த பெண்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்போது புகைப்படம் எடுக்க சென்ற செய்தியாளர்களை கட்சியினர் விரட்டி விட்டனர்.

உங்களுக்கு நல்ல வியாபாரம் தேர்தல் அதிகாரி ‘‘ஷாக்’’

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்த போது உறுதிமொழி எடுக்கவில்லை. அதனால் அவர் நேற்று மதியம் உறுதிமொழி எடுக்க திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அமைச்சர், தேர்தல் அதிகாரி காசிசெல்வியிடம், ‘‘இதுவரை எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்’’ என கேட்டார். அதற்கு அதிகாரி, ‘‘18 பேர்’’ என்று கூற, உடனே அமைச்சர், ‘‘உங்களுக்கு நல்லா வியாபாரம் நடக்கிறது’’ என்றார். இதனால் அதிகாரிகள் திகைத்து போயினர்.

Related Stories: