திருச்சி மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் திருமணிமுத்தாறு கரையோர மாற்றுச்சாலை திட்டம் என்னாச்சு?: ஜெயலலிதா வாக்குறுதி காணாமல் போச்சு என மக்கள் குற்றச்சாட்டு

சேலம்: சேலத்தில் திருச்சி மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, திருமணிமுத்தாறு கரையோரத்தில் மாற்றுச்சாலை அமைக்கப்படும்  என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதி என்னாச்சு என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக  கூறியுள்ள நிலையில், சேலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியே, இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த தேர்தலின் போது, சேலத்தில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, திருச்சி மெயின்ரோட்டில் கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க, திருமணிமுத்தாற்றை ஒட்டிச் செல்லும் கரையில் புதிய மாற்றுச்சாலை  ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வராக தேர்வாகி, அவர் இறந்தும் போனார். ஆனால், அவர் அளித்த  வாக்குறுதியின்படி, திருமணிமுத்தாற்றின் கரையோரத்தில் மாற்றுச்சாலை அமைக்க எவ்வித பூர்வாங்க பணியும் தொடங்கப்படவில்லை. கள ஆய்வை  கூட அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. இதனால், இன்றைக்கும் திருச்சி மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. காலை  மற்றும் மாலை நேரத்தில் அதிகளவு வாகனங்கள் செல்வதால், மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.இதுபற்றி வாகன ஓட்டிகள் கூறியதாவது:சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் எல்லாம் கமிஷனுக்காக கட்டப்பட்டது  போன்று இருக்கிறது. ஏனென்றால், அண்ணா பூங்காவில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் மேம்பாலம், விரிவாக  அமைக்கப்படவில்லை.

சாலையோர கடைகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பாலத்தையே வளைத்தும், சுருக்கியும் கட்டியுள்ளனர். பாலம் கட்டினால்  தான், அதிகளவு கமிஷன் கிடைக்கும், சாலை அமைத்தால் அந்த அளவிற்கு கமிஷன் கிடைக்காது என ஆட்சியாளர்கள் கட்டியிருக்கின்றனர். இதனால்  தான், சேலம் திருச்சி மெயின்ரோட்டிற்கு மாற்றாக, திருமணிமுத்தாற்றின் கரையோரம் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட சாலைக்கு, இன்னும் ஒரு சிறு  துரும்பை கூட எடுத்துப் போடவில்லை. தொடர்ந்து நெரிசலான சாலையில் சென்று வருகிறோம். கொடுத்த வாக்குறுதியை மறந்த இவர்கள், எப்படி  மீண்டும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: