வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த அமைச்சர் கே.சி.வீரமணி: தொகுதி மக்களிடம் என்ன சொல்வார்; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.வீரமணி. இவர் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவர் நாற்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து, தனது தொகுதி மக்களிடம் பிரச்சாரத்தை செய்து வருகிறார். இவர் பல கோடி மதிப்பில் சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், பல்வேறு தொழிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்தநிலையில், அறப்போர் இயக்கம் கே.சி.வீரமணி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதில், கடந்த 2011ம் ஆண்டு ரூ.2.3 லட்சமாக இருந்த இவரது சொத்து மதிப்பு, 2016ம் ஆண்டு ரூ.8 கோடியாக உயர்ந்தது.

ஆனால் தற்போது 2021ம் ஆண்டு ரூ.34.4 கோடியாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இவர் ரூ.3.32 கோடியில் ஏலகிரி மலை ஓட்டல், ரூ.4.89 கோடியில் திருப்பத்தூர் மலை ஓட்டல், ரூ.98 லட்சம் அகல்யா போக்குவரத்து, ரூ.98 லட்சம் ஹரிஹரா பிராப்பர்டீஸ், ரூ.1.79 கோடி ஹோம் டிசைனர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹோம் டிசைனர் ரூ.6.75 கோடி என பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளார். 2011ம் ஆண்டு குறைந்தளவில் இருந்து இவரது சொத்து மதிப்பு தற்போது பலகோடி உயர்ந்து இருப்பது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகாதா? வாங்கி குவித்துள்ள சொத்துகளை வாங்க வருமானம் எங்கிருந்து வந்தது. எந்த வருமானத்தில் வாங்கினீர்கள் என்று பிரசாரத்துக்கு வரும்போது மக்கள் கேள்வி கேட்பார்களே அமைச்சர் என்ன பதில் சொல்லபோகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக அமைச்சரின் சொத்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக அறப்போர் இயக்கம் வைத்துள்ள, இந்த குற்றச்சாட்டு தற்போது உள்ள தேர்தல் அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: