சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுக்க உத்தரவிட்டது யார்? எஸ்பி கண்ணனிடம் சிபிசிஐடி போலீசார் 2 மணிநேரம் சரமாரி கேள்வி

பாலியல் தொந்தரவு புகார் அளிக்க வந்தபோது சென்னை: முதல்வர் எடப்பாடி பிரசார பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சிறப்பு டிஜிபி, பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி காரில் இருந்து உடனே இறங்கிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் பரனூர் சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரி வந்த காரை போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்படாத பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவரது கார் சாவியை எஸ்பி கண்ணன் எடுத்து வைத்துகொண்டார். பிறகு ஒருவழியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னை வந்து உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின்படி சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. மேலும், பாலியல் புகாரின் மீது சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பு டிஜிபி மற்றும் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற கோரி புகார் அளித்து இருந்தனர். அதைதொடர்ந்து எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், எஸ்பி கண்ணனுக்கு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதைதொடர்ந்து எஸ்பி கண்ணன் நேற்று முன்தினம் தனது வழக்கறிஞருடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் எஸ்பி முத்தரசி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது, எஸ்பி கண்ணனிடம், புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுக்க யார் உங்களுக்கு உத்தரவிட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா, எதன் அடிப்படையில் பரனூர் சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரி வரும் காரை போலீசார் துணையுடன் வழிமறித்தீர்கள். கார் சாவியை எடுக்க உத்தரவிட்டது யார்? என்பது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் அளித்த பதிலை சிபிசிஐடி விசாரணை அதிகாரி முத்தரசி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் வெளியில் தகவல்கள் அளிக்க சிபிசிஐடி போலீசார் மறுத்துவிட்டனர்.

Related Stories: