பாமகவுக்கு ஒதுக்கியதால் விரக்தி அடைந்த அதிமுக பெண் நிர்வாகி கும்மிடிப்பூண்டியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்

சென்னை: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஆர்.லட்சுமி (52). இவர், 1991ம் ஆண்டு முதல் கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமையில் விருப்ப மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, கும்மிடிப்பூண்டி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதனால் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உதவி ஆட்சியர் ஜி.பாலகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிறகு ஆர்.லட்சுமி கூறுகையில், \”நான் 1989ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறேன், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக இதுவரை 8 முறை வென்றுள்ளது.  கும்மிடிப்பூண்டி அதிமுகவின் பலமான தொகுதியாக இருக்கும் நிலையில்  இந்த தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் பாமகவிற்கு ஒதுக்கியதால் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளேன் என்றார்.அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தது கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

Related Stories: