ஜனவரி பயணம் ரத்தான நிலையில் இங்கிலாந்து பிரதமர் ஏப்ரலில் இந்தியா வருகை

லண்டன்: ஏப்ரல் மாத இறுதியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று உலககெங்கும் பரவி ஒட்டுமொத்த மக்களையும் முடக்கிவைத்துள்ள நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிைல திரும்பி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அப்போது பிரிட்டனில் கொரோனா 2வது அலை ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்தானது. இந்நிலையில், அவர் ஏப்ரல் இறுதியில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (பிரெக்ஸிட்) வெளியேறுதலுக்குப் பின்னர் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்த அதுவும் குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய - பசிபிக் சுதந்திர வர்த்தக தொகுதியான டிரான்ஸ் - பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரிட்டன் கடந்த மாதமே விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது.

அதேபோல் ஆசியான் கூட்டமைப்பில் ஆலோசகராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பிரிட்டன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், போரிஸ்  ஜான்சன் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் சர்வதேசப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: