தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு இடையே மோதல்: பெப்பர் ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 500 கிராம் தங்கம், 1 லட்சம் கொள்ளை

* குருவியாக பலமுறை சென்று வந்தது அம்பலம்

* சிசிடிவி மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கிடையே ஏற்பட்ட தகராறில், அழகு கலை பெண் நிபுணர் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து 500 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார்  தேடி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையை சேர்ந்தவர் சுபிக்‌ஷா (30), அழகு கலை நிபுணர். இவர், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை சார்ஜாவில் இருந்து  சென்னைக்கு வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டிற்கு வந்து இறங்கினார். அப்போது திடீரென 3 பேர் சுபிக்‌ஷா முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து அவர் வைத்திருந்த 500 கிராம் தங்கம், 1 லட்சம் ரொக்க பணத்தை  கொள்ளையடித்துவிட்டு மாயமாகினர். இதை சற்றும் எதிர்பார்க்காத சுபிக்‌ஷா சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுபிக்‌ஷா வசித்து வரும் அருணாச்சலம் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி  கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், வெளிநாடுகளில் இருந்து ‘குருவியாக’ தங்கம் கடத்தி வரும் கும்பல் என்று தெரியவந்தது. இதையடுத்து புகார் அளித்த சுபிக்‌ஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, பிராட்வே பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் மற்றும்  அவரது 6 வயது மகளுடன் கணவன்- மனைவி போல் சுபிக்‌ஷா சார்ஜாவிற்கு சென்று அங்கிருந்து 500 கிராம் தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் சென்னையில் தங்கம் கடத்தும் கும்பல் ஒன்றுக்கு ‘குருவியாக’ செயல்பட்டு  வந்ததும், இதுபோல் சுபிக்‌ஷா பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் தங்கம் கடத்தும் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. தங்கம் கடத்தி வர சொன்ன கும்பல் தங்கம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சுபிக்‌ஷா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் சுபிக்‌ஷா மற்றும் அவரது ஆண் நண்பரிடமும் போலீசார் தங்கம் கடத்தல் குறித்தும்,  அதன் பின்னணி குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சுபிக்‌ஷா தனது ஆட்களை வைத்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: