பசுமையாக இருந்தது பாலைவனம் போல் மாறியது-அருகன்குளம் பூங்காவை சீரமைக்காத நகராட்சி

நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி மக்கள் வலியுறுத்தல்

*இது உங்க ஏரியா

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகன்குளம் பூங்காவை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பொழுதுபோக்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.தமிழகத்திலேயே பூங்கா இல்லாத ஒரே நகரமாக அறந்தாங்கி விளங்கி வருகிறது. மக்கள் அன்றாட பணிகளை முடித்து விட்டு தங்கள் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கும், பணி ஓய்வு பெற்றவர்கள், முதியோர் தங்கள் தங்கள் நண்பர்களை சந்தித்து பேசவும், மாணவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்கவும் பூங்காக்களை நாடுகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் பூங்கா பராமரிப்பை ஒரு அத்தியாவசிய பணியாக செய்து வருகின்றன. தற்போது கிராம ஊராட்சிகளிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்ற நிலையில் அறந்தாங்கி நகரத்தில் மட்டும் பூங்கா என்ற ஒன்று கிடையாது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 2வது பெரிய நகராக அறந்தாங்கி விளங்கி வருகிறது. அறந்தாங்கி பேரூராட்சியாக இருந்தபோது ஒவ்வொரு குடிநீர் நீரேற்று நிலையங்களிலும் ஒரு பூங்கா இருந்தது. குறிப்பாக கோபாலசமுத்திரம் பிருந்தாவனம் பூங்கா, நாடிமுத்து பூங்கா, எல்.என்.புரம் பூங்கா, பேருந்து நிலையம் அருகே காந்தி பூங்கா என பல பூங்காக்கள் இருந்தது.

அறந்தாங்கி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நீரேற்று நிலையங்களில் இருந்து பூங்காக்களை முறையாக பராமரிக்காததால் பூங்காக்களில் இருந்த செடி, கொடிகள் காய்ந்து விட்டன. பேருந்து நிலையம் அருகே இருந்த காந்தி பூங்கா, பேருந்து நிலைய வணிக வளாகம் மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டுவதற்காக மூடப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாகம் மற்றும் விடுதி கட்டப்பட்டது.

இதைதொடர்ந்து 1994ம் ஆண்டு அறந்தாங்கி அருகன்குளம் பகுதியில் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. மரம், செடி, கொடிகள், குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டு 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் அருகன்குளம் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. பல நிழல் தரும் மரங்கள், கண்ணை கவரும் அழகு செடிகள் என பூங்கா அமைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அப்பகுதி பசுமை போர்வை போர்த்தியதை போன்று மாறியது.

அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அருகன்குளம் பூங்காவை பராமரித்து வந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் பூங்காவின் பராமரிப்பை ஒரு சமூகநல அமைப்பிடம் ஒப்படைத்தது. தொடக்கத்தில் ஓரளவு பராமரித்து வந்த அந்த அமைப்பினர் பின்னர் பூங்காவை பராமரிக்காமல் விட்டு விட்டது. இதனால் அருகன்குளம் பூங்காவில் இருந்த செடிகள் கருகின. சிறுவர் விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி சாதனங்களை சமூக விரோதிகள் திருடி சென்றனர். மேலும் பூங்கா திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அருகன்குளம் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன் என தற்போதைய எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறினார். அதைதொடர்ந்து பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்னும் அருகன்குளம் பூங்காவை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அருகன்குளம் பூங்காவில் சில மரங்களை தவிர வேறு எதுவும் தற்போது இல்லை. இரவு நேரங்களில் அருகன்குளம் பூங்கா வளாகம் திறந்தவெளி மதுபானம் அருந்தும் பாராக மாறிவிட்டது.

முதல்நிலை நகராட்சி அந்தஸ்தில் உள்ள அறந்தாங்கி நகராட்சி, அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு பூங்காவை கூட பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராதது ஏனென்று தெரியவில்லை. பூங்காக்களுக்கு செல்வது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. மக்களின் மனநிலைக்கு நல்ல மருந்தாகவும் பூங்காக்கள் அமைகிறது. மக்கள் வாக்கிங் செல்ல, உடற்பயிற்சி செய்ய, நல்ல காற்றை சுவாசிக்க என பூங்கா பொழுதுபோக்கோடு, உடல்நலம் காப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே அறந்தாங்கி நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அருகன்குளம் பூங்காவை புனரமைக்க வேண்டும் என்பதே அறந்தாங்கி நகர மக்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அறந்தாங்கி அருகன்குளம் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை முறையாக பராமரிக்காததால் பூங்கா தற்போது பாலைவனம் போல மாறியுள்ளது. இந்த பூங்காவை புனரமைக்க நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படுமென நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் இன்னும் பூங்காவை புனரமைக்க ஆர்வம் காட்டவில்லை. சுற்றுச்சுவர் மட்டும் பெயரளவுக்கு கட்டி வைத்துள்ளது. நகராட்சியின் முக்கிய பணிகளில் ஒன்றாக பூங்கா பராமரிப்பு உள்ளது. அறந்தாங்கியில் ஒரு பூங்கா கூட இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகம் எந்த பூங்காவை பராமரிக்க போகிறது என்ற கேள்வி எழுகிறது. பூங்கா இருந்த இடத்தில் பூங்காவை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றே புரியவில்லை என்றார்.

Related Stories: