நாகை மாவட்டத்தில் வேர்க்கடலை அறுவடை தீவிரம்-மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

நாகை : நாகை மாவட்டத்தில் வேர்க்கடலை அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. மழையால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நாகை மாவட்டத்தில் கடலோர பகுதிகளான தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாட்கள் பயிரான இது ஒரு ஆண்டுக்கு 3 முறை பயிரிடப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் பயிர் செய்யப்பட்ட வேர்கடலை அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக இந்த பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் ஜனவரி மாதத்தில் காலம் தவறிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல், காய்கறிகள் மற்றும் நிலக்கடலை சாகுபடி என அனைத்தும் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கடலையின் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கி அழுகி மகசூல் குறைந்தது. ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது 4 அல்லது 3 என்ற அளவில் உள்ளது.

அதிலும் சில செடிகளில் மழை காரணமாக பாதிப்படைந்து உள்ளே பருப்பு இல்லாமல் வெறும் கடலை தோலாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி கூட வழங்க முடியாமல் விவசாயிகள் இருக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: