ஆட்சியின் ஊழல்களை மக்களிடம் தெரிவிப்பேன் பண மூட்டையை நம்பி அதிமுக தேர்தலில் போட்டி: திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் பேட்டி

திருவண்ணாமலை: பண மூட்டையை நம்பி இந்த தேர்தலில் அதிமுக ேபாட்டியிடுகிறது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது மக்களுக்கு தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: கோவில்பட்டியில் நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க இருக்கிறேன். அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பிறகும், இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஊழல்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியும். கடுமையான கொரோனா காலத்தில்கூட எல்லாவற்றிலும் முறைகேடுகள் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். எல்லா துறைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ள நெடுஞ்சாலை துறையில் நடந்துள்ள ஊழல்களையும், முறைகேடுகளையும் மக்களிடம் எடுத்து வைப்பேன். ஆளும்கட்சியான அதிமுக பண மூட்டையை நம்பி இந்த தேர்தலில் நிற்கிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது மக்களுக்கு தெரியும். ஒரு கட்சி பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நின்றால், என்ன நடக்கும் என்பது இந்த தேர்தலில் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடாமல், கோவில்பட்டியில் போட்டிடுவது ஏன் என்ற கேள்விக்கு, ‘‘ஆர்கே நகர் தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லையே. இன்னும் அவகாசம் இருக்கிறது’’ என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் காரில் கிரிவலம் சென்று வழிபட்டார். கிரிவலப்பாதையில் உள்ள மூக்குப்பொடி சாமியார் சமாதியை காரில் இருந்தபடியே தரிசித்து சென்றார். அதிமுக ஏமாற்றுவேலை: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில்,தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில்  இலவசத் திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை’’ என்றார்.

Related Stories: