டிடிவி.தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்றார் விஜயகாந்த்

நீண்ட இழுபறிக்கு பிறகு அமமுக-தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. டிடிவி.தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளை தேமுதிக பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு கேட்ட தொகுதிகள் ஒதுக்கபடவில்லை. இதனால், பிரச்னை எழுந்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. இந்தநிலையில் தேமுதிகவை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க டிடிவி.தினகரன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிகவிற்கு 50 முதல் 60 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக அமமுக தெரிவித்தது. ஆனால், முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிருத்துவது என்பதில் தொடர் இழுபறி ஏற்பட்டு வந்தது.

முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்த வேண்டும் என பிரேமலதா கூறினார். ஆனால், இதை டிடிவி.தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இரு கட்சி சார்பில் மூத்த நிர்வாகிகளும் பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வந்தனர். ஆனால், கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. இந்தநிலையில், டிடிவி.தினகரன் அமமுக சார்பில் தேர்தல் போட்டியிட உள்ள 195 வேட்பாளர்களின் பட்டியலை 3 கட்டங்களாக அறிவித்தார்.  

இதனால், அமமுக-தேமுதிக இடையே கூட்டணியில் உடன்பாடு முடிவுற்றதாக கூறப்பட்டது. ஆனால், டிடிவி.தினகரன் திரை மறைவாக பிரேமலதாவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிடிவி.தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில், அமமுக-தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. அமமுக துணைப்பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டனர்.  அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதி ஒதுக்கப்பட்டது.

Related Stories: