அமெரிக்காவில் போலீஸ் தாக்கி இறந்த கருப்பின வாலிபருக்கு ரூ.196 கோடி இழப்பீடு: இதுவரை இல்லாத அதிகப்பட்ச தொகை

மின்னாபோலீஸ்: அமெரிக்காவில் போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்ட கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி இழப்பீடு வழங்க மின்னாபோலீஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னாபோலீஸ் நகரில், கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாய்ட் போலீசால் கொடூரமாகத் தாக்கி கொல்லப்பட்டார். அவரின் உயிர் போகும் வரை 9 நிமிடங்கள் அவரது கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து போலீஸ் மிதித்துக் கொண்டிருந்த புகைப்படம் வெளியானதால், மிகப்பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.

மேலும், பிளாய்ட்டின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டும் சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பிளாய்ட் குடும்பம் சார்பில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரும், மின்னாபோலீஸ் நிர்வாக போலீஸ் தரப்பு வழக்கறிஞரும் இழப்பீட்டுத் தொகை தொடர்பாக நேற்று சந்தித்து பேசினர். அதில், பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி இழப்பீடு வழங்க மின்னாபோலீஸ் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அமெரிக்க வரலாற்றில் சிவில் உரிமைகளுக்காக ஒருவருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தொகை இதுதான்.

2 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையால் உயிரிழந்த அமெரிக்கப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.145 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதே இதுவரையில் அதிகப்பட்ச தொகையாக இருந்தது. இந்த சுமூக உடன்பாடு பற்றி பிளாய்ட் குடும்ப வழக்கறிஞரான பென் க்ரம்ப் கூறுகையில், ‘‘இந்த நீதி கிடைப்பதற்காக நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளோம். ஜார்ஜ் பிளாய்ட் வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தி உள்ளது. கருப்பினத்தவர்களின் வாழ்க்கை முக்கியமானது என்பதும் இதில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், எவ்வளவு பணமும் பிளாய்ட்டை திரும்பக் கொண்டு வராது,’’ என்றார்.

Related Stories: