வலுவான வேட்பாளரால் அதிமுகவினர் கலக்கம் சபாஷ் சரியான போ(ட்)டி...!: ஓபிஎஸ் ஓட்டத்துக்கு ‘செக்’ வைக்கிறார் ‘தங்கம்’

போடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சுக்கு எதிராக, திமுக வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் களம் இறங்குவதன் மூலம் இங்கு சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. அன்று ஒரே கட்சியில் எதிரெதிரே செயல்பட்ட இவர்கள், இன்று தேர்தல் களத்தில் எதிரெதிரே மோதுவதால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப். 6ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக யார் திமுக வேட்பாளர் என்ற சஸ்பென்ஸ் கடந்த சில நாட்களாகவே அதிமுகவினரிடம் மட்டுமல்ல... பொதுமக்கள் மத்தியிலும் நீடித்தது. பரபரப்பான சூழலில் திமுக வேட்பாளராக தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

21 ஆண்டுகளாக...

தேர்தல் போட்டியில் மட்டுமல்ல... இருவருக்கும் இடையே கடந்த 21 ஆண்டுகளாக அரசியல் போட்டி நடந்து வந்துள்ளது. தங்கத்தமிழ்செல்வனின் தந்தை தங்கவேலு அதிமுக ஒன்றியசெயலாளராக இருந்தவர். தங்கதமிழ்செல்வன் 1996ல் கட்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளரானார். அப்போது எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளரானார் ஓபிஎஸ்.

டிடிவி மூலமாக...

தங்கதமிழ்செல்வன் 2000ம் ஆண்டு மாநில மாணவரணி செயலாளரானார். 1999ம் ஆண்டு பெரியகுளம் எம்பி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தங்கதமிழ்செல்வன் அளவிற்கு டிடிவி.தினகரனிடம் ஓபிஎஸ்சுக்கு பரிச்சயம் ஏற்படவில்லை. அப்போது தேர்தல் பணிக்காக டிடிவி, பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா வீட்டில் தங்கினார். அன்று முதல் ஓபிஎஸ், டிடிவியிடம் தன்னை பவ்யமானவராக காட்டிக் கொண்டார். இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

தலைமைக்காக ராஜினாமா...

கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆண்டிபட்டியில் தங்கத்தமிழ்ச்செல்வன், பெரியகுளத்தில் ஓபிஎஸ் முதன்முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆயினர். அப்போது ஜெயலலிதாவுக்காக தங்கதமிழ்செல்வன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட வழி தந்தார். பின்னர் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியானார். மேலும், தேனி மாவட்ட அதிமுக செயலாளராகவும் பதவி பெற்றார்.

பம்மிய பன்னீர்...

அதே நேரம் ஓபிஎஸ் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா டான்சி வழக்கில் சிறை சென்றபோது எதிர்பாராவிதமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவராக தன்னை காட்டிக் கொண்டார் ஓபிஎஸ். இதற்கு பின்னர் 2011, 2016 தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமலேயே போனது. அமைச்சர் பதவி கிடைத்தால், மாவட்டத்தில் தனக்கு இருக்கும் மதிப்பு போய் விடுமென ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதே இதற்கு முழுமுதல் காரணம். இதனால் இருவரிடையே பனிப்போர் ஏற்பட்டது.

திமுகவில் இணைப்பு...

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். இதையடுத்து நடந்த அரசியல் மாற்றத்தால் டிடிவி.தினகரன் அணிக்கு தங்கதமிழ்செல்வன் சென்றார். பின்னர் திமுகவில் இணைந்தார். திமுகவில் சேர்ந்த தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு திமுக தலைமை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தேனி திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்கதமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். தங்கதமிழ்செல்வன் திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல், அதிமுகவுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஓபிஎஸ்சுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். தற்போது திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் வாழ்க்கையில்  தனக்கு முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்சை திமுக வேட்பாளராக பழிக்குப்பழி வாங்குவதில் தீர்க்கமாக இறங்கியுள்ளார்.

திரும்பிப்போ...

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘‘தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்’’ என சீர்மரபினர் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில் தேவேந்திர குல வேளாளர் பெயரை வழங்க இபிஎஸ் - ஓபிஎஸ் அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்த சட்டத்தால், வேளாளர் சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமேடையிலே, ‘‘ஓபிஎஸ்சே... திரும்பிப்போ’’ என கோஷமிட்டது தொகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது திமுக வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் களமிறங்கியதான் மூலம், ‘‘சபாஷ் சரியான போட்டி... தொகுதிக்கு எதுவுமே செய்யாத ஓபிஎஸ்சை ஓட ஓட விரட்டுவார்’’ என இப்போது மக்கள் வெற்றித்திலகமிட துவங்கி விட்டனர். இதனால் ஓபிஎஸ் தரப்பும் கலக்கம் அடைந்துள்ளதாக தேனி மாவட்ட அதிமுகவினர் தெரிவித்தனர்.

‘‘ஓபிஎஸ் சொத்துக்களை கஜானாவில் சேர்ப்பேன்’’

திமுகவில்  சேர்ந்த நிகழ்ச்சி வீரபாண்டியில் நடந்தபோது தங்கதமிழ்செல்வன் பேசுகையில், ‘‘போடி தொகுதியில் ஓபிஎஸ்சை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்குங்கள்.  நான் எம்எல்ஏவானால் எனக்கு ஒருநாள் போலீஸ் மந்திரி பதவி தாருங்கள்.  ஓபிஎஸ் கடந்த 19 ஆண்டுகளாக  வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ள  சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்ப்பேன்’’ என்றார்.

Related Stories: