ஆண்டிபட்டியை தவிர்த்து விட்டு கோவில்பட்டியில் டிடிவி தினகரன் களம் இறங்குவது ஏன்?..பரபரப்பு பின்னணி தகவல்கள்

கோவில்பட்டி: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக டிடிவி தினகரன் முயன்றதால் சுதாரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்சுடன் கைகோர்த்து, சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார். 2017ல் ஒத்திவைக்கப்பட்டு 2018ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால் அவர் மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அத் தேர்தலோடு நடந்த 22 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் போட்டியிட்ட அமமுக படுதோல்வியடைந்தது. இருப்பினும் பல இடங்களில் அதிமுக தோற்பதற்கு அமமுகவின் ஓட்டுப் பிரிவு காரணமாகியது.

அமமுகவின் படுதோல்வியால் அக்கட்சியில் இருந்த முன்னணி தலைவர்கள் பல அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதற்கிடையே சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியல் துறவறம் மேற்கொண்டதால் அமமுக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமா? என்று பலர் சந்தேகப்பட்ட நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த டிடிவி தினகரன் நேர்காணல் நடத்தத் தொடங்கினார். விருப்ப மனு கொடுத்த 4 ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடந்தது. முதற்கட்டமாக 15 பேர் பட்டியலை வெளியிட்ட அவர் நேற்று 2ம் கட்டமாக 50 பேர் பட்டியலை வெளியிட்டார். அதில் கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

முதலில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போட்டியிடுவதாக கூறிய டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கு தொகுதி சீரமைப்பில் நாயக்கர் ஓட்டுக்கள் குறைந்து, தேவர் சமுதாய ஓட்டுக்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்வது காரணம் என்று கூறுகின்றனர். அதாவது தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள கயத்தாறு ஒன்றியம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்கள் முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொகுதியை ரத்து செய்து அதிலிருந்த பகுதிகளை ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சேர்த்ததால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்த கயத்தாறு ஒன்றியம் உள்ளிட்ட தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் கோவில்பட்டி தொகுதியில் சேர்ந்துவிட்டன.

இதனால் நாயக்கர்கள் பெரும்பான்மையாக இருந்த கோவில்பட்டி தொகுதி தற்போது தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியாக மாறிவிட்டது. சுதந்திரம் அடைந்ததிலிருந்தே கோவில்பட்டி தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்றாலும், அதிமுக, திமுக வேட்பாளர்கள் என்றாலும் நாயக்கர் சமுதாயத்தினரே நிறுத்தப்பட்டனர். தொகுதி சீரமைப்புக்கு பின்னர் நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் அமமுக வெற்றி பெற்றது. இதுபோல் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் 76 ஆயிரத்து 866 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்தான் அவர்  19 ஆயிரத்து 478 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆண்டிபட்டியில் போட்டியிடுவேன் என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு ஓபிஎஸ், தங்கத்தமிழ்செல்வன் ஆகியோரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் கரை சேருவது கடினம் என்று கணித்தே, கோவில்பட்டியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

கோவில்பட்டியில் தொகுதியில் சிறிய தொகுதி என்பதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்ற எண்ணமும் டிடிவி தினகரனுக்கு உள்ளது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3ம் முறையாக களம் இறங்குகிறார். திமுக கூட்டணியில் கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு பலமான கூட்டணிக்கு மத்தியில் டிடிவி தினகரனும் களம் இறங்கியுள்ளது, கோவில்பட்டி தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

Related Stories: