தினமும் ஒரு சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சீட் எதிர்கோஷ்டியினர் கடும் கொந்தளிப்பு

அதிமுகவின் மூத்த நிர்வாகி. ஆரம்பகால உறுப்பினர். எம்ஜிஆர் காலத்திலிருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் திண்டுக்கல் சீனிவாசன். 4 முறை எம்பியாகவும் இருந்தவர். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், வனத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

* என்ன செய்தார்....?

தொகுதிக்குள் காவிரி குடிநீர் கொண்டு வருவேன் என்றார். திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள 9 பஞ்சாயத்து கிராமங்களுக்கு இதுவரை காவிரி குடிநீர் கிடைக்கவில்லை. தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. எடப்பாடியின் தீவிர விசுவாசியாக இருப்பதால் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் இவருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர் வெற்றி பெறுவது கடினம்தான் என கட்சியினரே கூறுகின்றனர்.

* சிறுமலையில் மரக்கடத்தல்....?

இவர் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிறுமலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இவ்வனப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பட்டா நிலம், 16 ஆயிரம் ஏக்கர் அனுபவ புறம்போக்கு நிலம், 15 ஆயிரம் ஏக்கர் வனத்துறை நிலம் உள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சிறுமலை, பன்றிமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை உள்ளடக்கியது. இவற்றில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

ஒரு முறை பெற்ற அனுமதிச்சீட்டை வைத்து பலமுறை மரங்கள் ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள காடுகளில் மரம் கடத்தல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்பியதாலும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவதாலும் இவருக்கு இம்முறை சீட் மறுக்கப்படும். முன்னாள் மேயர் மருதராஜ்க்கு சீட் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலைமை இவருக்கு சீட் வழங்கியிருப்பதுக்கு, உள்ளூர் அதிமுகவினரிடம் இருந்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மீண்டும் சீட் கிடைத்துள்ளதால் இவரது அரசியல் எதிரியான நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள், இவரது வெற்றி வாய்ப்பை நசுக்க காத்திருப்பதாக அதிமுகவினரே தெரிவிக்கின்றனர்.

* எட்டி பார்க்காதவரை எப்படி தேர்ந்தெடுப்பது?

தொகுதியை சேர்ந்த கதிரேசன் கூறுகையில், ‘‘தேர்தலின்போது தொகுதி பக்கம் வந்த அமைச்சர் அதன்பின் வந்ததே இல்லை. ஊராட்சி கிராமப்பகுதிகளுக்கு அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை. திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, பல ஆண்டுகளாகியும் இன்னும் அதற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை. வனம் போல் காட்சியளித்த சிறுமலை இப்போது மொட்டைக்காடாக உள்ளது. அங்கிருந்த பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு விட்டன. சுற்றுலாத்தலமாக ஆக்கப்படும் என்றார். இதுவரைக்கும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்கிறார்.

Related Stories: