அதிமுக-வில் சீட் கொடுக்காததால் அதிருப்தி!: சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்தித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் தினகரனுடன் இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. ராஜவர்மன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நடந்த சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வெற்றிபெற்றார். அவருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்தன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தம்மை கொல்லப் பார்ப்பதாக ராஜவர்மன் புகார் தெரிவித்திருந்தார்.

இவர் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிசந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக வேட்பாளர் பட்டியலில் பாகுபாடு கட்டப்பட்டுள்ளதாக ராஜவர்மன் குற்றம் சாட்டியிருந்தார். அதிமுக உட்கட்சி மோதல் எதிரொலியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பார் என்று பொதுவெளியில் ராஜவர்மன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். இம்முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத அதிமுகவினர் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வான ராஜவர்மன் அமமுக பொதுச் செயலாளரை சந்தித்துள்ளார்.

Related Stories: