பத்மநாபபுரம், கிள்ளியூர் தொகுதிகள் யாருக்கு? நாகர்கோவில், குளச்சல் பாஜவுக்கு ஒதுக்கியதால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தளவாய் சுந்தரத்தை அறிவித்துள்ள நிலையில், நாகர்கோவில், குளச்சல் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கியது அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் ஆகிய 3 தொகுதிகள் பா.ஜ.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில்  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2001, 2006  சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். அதன் பின் 2006ல் போட்டியிட்டு  தோல்வி அடைந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஆஸ்டினிடம் தோல்வி அடைந்தார். இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

ஆனால் குமரி மாவட்டத்தில் கிள்ளியூர், பத்மநாபபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் யாருக்கு என்பது முடிவாகவில்லை. அதிமுகவும், பா.ஜ.வும் இந்த தொகுதியில் களமிறங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளை பொருத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதால், அதிமுக, பாஜவில் வேட்பாளர்களை நிறுத்துவது சிரமமாக அமைந்துள்ளது. கிள்ளியூர் தொகுதி தமாகாவுக்கு என கூறி இருந்தனர். அந்த கட்சி முடிவை பொருத்து மீதி இருக்கிற இரு தொகுதிகளையும் அதிமுக, பா.ஜ. என பிரித்து போட்டியிடுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கன்னியாகுமரியை பொருத்தவரை கடலோர கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கு மீனவர்கள் ஓட்டு முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது  கன்னியாகுமரி - கோவளம் இடையே சரக்கு பெட்டக துறைமுக விவகாரம் எழுந்து இருப்பது, அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான மாவட்ட செயலாளர் அசோகன் நாகர்கோவில் தொகுதியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் போன்றவர்களும் நாகர்கோவிலுக்கு குறி வைத்தனர். இதே போல் முன்னாள் அமைச்சர் பச்சைமால், குளச்சல், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய 3 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்திருந்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதியை அதிகம் எதிர்பார்த்தார். ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடுபொடியாகி உள்ளது.  நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் 3 தொகுதிகளையும் பா.ஜ.வுக்கு மாற்றி விட்டதும், பத்மநாபபுரம் யாருக்கு என்பது அறிவிக்காமல் இருப்பதும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: