கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிய மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் சேம.நாராயணன்

தமிழகத்தில் மண்பாண்ட தொழில் செய்யும் 40 லட்சம் குலாலர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், மண்பாண்ட தொழிலில் தற்போது 52 ஆயிரம் பேர் தான் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் மண்பாண்ட தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகின்றது. மண்பாண்ட தொழில் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் தற்போது கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவேதான் இந்த தொழிலில் ஈடுபட்டோர் மாற்றுத்தொழில் நோக்கி சென்று விட்டனர். ஆகையால் செங்கல், சிறு ஓடு, சிலைகள், கலைநயமிக்க பொருட்கள் செய்யும் தொழிலுக்கு சிலர் சென்று விட்டனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 ஆயிரம் பேர் தொழில் செய்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் களிமண் எடுக்க கூடாது என்று கூறுகின்றனர். அங்கு அவர்களை மண் எடுக்க அனுமதியில்லை. இதனால், மண்பாண்ட தொழில் செய்வோர் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. இவர்கள், கட்டுமான தொழில் வேலை, டிரைவர், காவலர்கள் போன்ற வேலைகளுக்கு சென்று விட்டனர்.

மேலும், மண்பாண்ட பொருட்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. மண்பாண்டங்களை பயன்படுத்தினால் உடையும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், மண்பாண்டங்களில் உணவுகளை சமைத்து சாப்பிட்டால் 100 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பதை மக்கள் மறந்து போய் விட்டனர். நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற உணவு மண்பாண்டங்களில் செய்யும் உணவு தான். தற்போது உலோக பொருட்களில் சமைத்து சாப்பிடுவதால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மண்பாண்டத்தை பயன்படுத்தி  நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். இதை மக்கள் உணர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கென்று இந்த அரசு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. கொரோனா காலத்தில் 8 மாத காலம் வேலையில்லாமல், இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தவொரு நிவாரண உதவியும் இந்த அரசு செய்து தரவில்லை.

கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.3,500 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அந்த ரூ.3,500 கோடியில் இருந்து எடுத்து, ஒரு மூட்டை அரிசி, ரூ.5 ஆயிரம் நிதியுதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அதையும் செய்து தரவில்லை. மத்திய, மாநில அரசின் கதர் கிராம தொழில் மூலம் ஆங்காங்கே  ஒன்றிரண்டு பேருக்கு மின்சாரத்தால் இயக்கக்கூடிய சீலா வீல் தந்தனர். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் வழங்கவில்லை. எனவே, இது, யானை பசிக்கு சோளப்பொறி என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞர் முதல்வராக இருந்தபோது, கடந்த 2006ல் பல்வேறு தொழில்கள் செய்தவர்களின் நலன் கருதி 17 தொழிலாளர்களுக்கென வாரியம் அமைத்தார். அதில், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்  ஒன்று. இந்த வாரியம் மூலம் மக்கள் நிறைய பயன்பட்டனர். திமுக ஆட்சிக்கு பிறகு இந்த வாரியங்களால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. அதுவும் 2011 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். கலைஞர் ஆட்சியில் ெகாண்டு வந்ததாலோ என்னவோ இந்த வாரியத்தை முடக்கி விட்டனர்.

இந்த வாரியம் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் தர வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்சாரத்தால் இயக்கக்கூடிய (சீலா வீல்) மத்திய அரசு கதர் கிராமத் தொழில் ஆணையம் மூலமாகவும், தமிழக அரசு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலமாகவும் வழங்கி வருகிறது. இதை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், மின்சாரமும் இலவசமாக வழங்க வேண்டும்.  மண்பாண்ட தொழில் பயிற்சி கல்லூரி சென்னை, சேலம், தஞ்சை, நெல்லை என நான்கு தொழில் பயிற்சிக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும். பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை,, கரும்பு போன்ற உணவு பொருட்கள் உடன் ஒரு வேட்டி, சட்டையுடன் ரூ.2500 கொடுத்து உதவி செய்கிற அரசு, பொங்கல் திருநாளில் புது அரிசியை புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒரு புது அடுப்பும், ஒரு புதுப்பானையும் கொள்முதல் செய்து இலவசமாக வழங்க வேண்டும்.

கிராமங்களில் வாழும் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அடிமனை பட்டாவை  தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். நலிந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு அங்காடிகளில் ஒரு கடையை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். ஆனால், எங்களது எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இது தான் எங்களின் வருத்தம். தற்போது மண்பாண்ட தொழிலில் புத்துயிர் பெற வேண்டுமென்றால் அரசு களிமண் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்டங்கள் செய்வோர் வசதிக்காக தொழிற்கூடங்கள் அமைத்து தர வேண்டும். அடுத்து வரும் அரசாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக உள்ளது.

Related Stories: