தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் நடத்தப்பட இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதில், சட்டப்பேரவை பதவிக் காலம் முழுமையாக முடிந்த பின்னர், தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். குறிப்பாக, மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக மாறுபட்ட தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும். அதில் முறைகேடுகளுக்கு அடிப்படையாக அமையும்,’ என அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா முன்வைத்த வாதத்தில், “தேர்தலை நடத்துவதற்கும், சட்டப்பேரவைகளை கலைப்பதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு என எந்த சட்ட விதிகளும் கூறவில்லை.

அப்படி இருக்கும்போது பேரவை காலக்கெடு முடிவதற்குள் தேர்தல் தேதி எப்படி அறிவிக்கப்பட்டது,’’ என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், ‘சட்டப்பேரவையை யார் இங்கு தற்போது கலைத்தது? தேர்தலில் ஆளும் கட்சியினர் தோல்வி அடைந்தால் சட்டப்பேரவையில் அமர முடியாது. இது தேர்தல் சட்ட விதியாகும். அதில், நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். மனுதாரருக்கு தேவையென்றால் உயர் நீதிமன்றத்தை நாடலாம்,’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எம்.எல்.சர்மா, ‘‘ இது வழக்கு கிடையாது. தேர்தல் தொடர்பான விவகாரம் என்பதால் தான் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,’’ என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘‘உங்களின் அனைத்து கோரிக்கைகளும் கொண்ட மனுவை நாங்கள் முழுமையாக படித்து விட்டோம். அதில், எந்த முகாந்திரமும் இல்லை,’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

மோடி பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு

வழக்கறிஞர் சர்மா தனது மனுவில், ‘நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவான நபர் என்பதால் அவர் கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,’ என்றும் கோரியிருந்தார். அதையும், உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

Related Stories: