திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கையெழுத்தானது. சட்டசபை தேர்தலில் 174 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதி, மமக 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மதிமுக 6, காங்கிரஸ் 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று மாலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தமிழகத்தில் 3(மூன்று) சட்டமன்ற தொகுதிகளை பங்கீட்டு  கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு நேற்று வரை 60 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது. இதையடுத்து மீதியுள்ள 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: