கோகுலம் மக்கள் கட்சிக்கு தளி தொகுதி ஒதுக்கீடு அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு எதிராக திருமங்கலத்தில் மருது சேனை சங்கம் போட்டி: அமமுக அறிவிப்பு

சென்னை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு எதிராக திருமங்கலத்தில் அமமுக சார்பில் மருது சேனை சங்கத்துக்கு அத்தொகுதி ஒதுக்கீடு செய்து டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அமமுக, கோகுல மக்கள் கட்சியும்   கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமமுகவுக்கும், கோகுல மக்கள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தளி சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அமமுகவும், மருது சேனை சங்கமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமமுகவிற்கும் மருது சேனை சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமமுகவின் தலைமையிலான கூட்டணியில், மருது சேனை சங்கத்திற்கு திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே தேர்தல் பணிகளிலும் ஈடுபட தொடங்கி விட்டார். அவருக்கு எதிராக மருது சேனை சங்கத்துக்கு திருமங்கலம் தொகுதியை அமமுக ஒதுக்கியுள்ளது. திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மையான அகமுடையார் சமுதாயத்தினர் வாக்குகள் இருப்பதால் அதை குறி வைத்தே மருது சேனைக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இது, அமைச்சர் ஆர்பி. உதயகுமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று டிடிவி.தினகரன் நம்புவதாகவும், அதனாலேயே மருது சேனைக்கு ஒதுக்கியதாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: