தேர்தல் நடத்தை விதி அமலானதால் ரூ.5,000 கோடி டெண்டர் நிறுத்தம்: கமிஷன் கொடுத்த நிறுவனங்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி

* அதிர்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

* விவிஐபிக்களை கை காட்ட முடியாமல் தவிப்பு

சென்னை: தமிழகத்துக்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், டெண்டர் எடுக்க கமிஷன் கொடுத்தவர்கள் பணம் அல்லது டெண்ரை தங்களுக்கு தரக் கோரி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கடந்தாண்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ₹10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டன.

தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விட்டு முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் தான் பல்வேறு திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரிக்கான கட்டிடம், கால்நடை மருந்தக கட்டிடம், புறநோயாளிகள் பிரிவுகளுக்கான கட்டிடம், கல்லூரி மாணவ மாணவி விடுதி கட்டிடங்கள், அவசர சிகிச்சை மைய கட்டிடம் உட்பட 100 கட்டுமான பணிகளுக்கும், ₹3,159 கோடி மதிப்பிலான காவிரி உபவடி நில பணிகள், ரூ.241 கோடி மதிப்பிலான வெண்ணாறு உப வடிநில பணிகள், வரட்டாறு தடுப்பணை உட்பட 41 நீர்வளப்பிரிவு பணிகள் ஆகியவற்றுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் மார்ச் முதல்வாரத்தில் திறக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து புதிதாக அரசாணையோ மற்றும் டெண்டர் அறிவிப்புகளோ வெளியிடக்கூடாது. மேலும், டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அதன்படி, அனைத்து டெண்டர் அறிவிப்புகளை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனால், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு டெண்டர் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டவுடன், தங்களுக்கு டெண்டர் தர வேண்டும் என சில ஒப்பந்த நிறுவனங்கள் அதிகாரிகள் சிலரிடம் முன்கூட்டியே கமிஷன் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பேரில் மேலிடத்துக்கு உடனடியாக கமிஷன் தொகை செட்டில் செய்யப்பட்டன. இந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நமக்கு டெண்டர் கிடைக்குமா என்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. எனவே, டெண்டர் இறுதி செய்ய கமிஷன் கொடுத்த ஒப்பந்த நிறுவனங்கள் அதிகாரிகளிடம் பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் உங்களுக்கு டெண்டரை எப்படியாவது வாங்கி தருகிறேன் எனக்கூறி ஒப்பந்த நிறுவனங்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: