நட்சத்திர ஓட்டல்களில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்: அதிமுக தலைமை அலுவலகம் வர கூட்டணி கட்சிகள் மறுப்பு: கோடிகளில் புரளுவதால் பல லட்சங்களை தாறுமாறாக செலவு செய்கிறதா அதிமுக?

ஜெயலலிதா காலத்தில் இருந்த நடைமுறைகளை மாற்றி, நட்சத்திர ஓட்டல்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை பேசும் கலாசாரத்தை அதிமுக கொண்டு வந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோடிகளில் புரளுவதால் பல லட்சங்களை வாடகைக்கு செலவழிக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்து பார்த்தால் திமுக தலைவராக கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் இருந்தபோதும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை என்பது அந்தந்த கட்சிகளின் தலைமை அலுவலகங்களில்தான் நடந்தது.  தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் பலர் ஏகபோகத்துக்கு சொந்தக்காரர்களாக மாறிவிட்டதும் ஒரு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.  ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கூட்டணி கட்சி தவைர்கள் வீட்டில் அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து கூட்டணி கட்சி தலைவர்கள் வந்து பேசுவார்கள். இறுதியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் தொகுதிகளை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.  இப்படித் தான் அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கு இவ்வளவு தொகுதிகள்தான் ஒதுக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு எண்ணிக்கையை சொல்வார். 10 தொகுதிகள் சொல்லியிருக்கிறார் என்றால், இரண்டாம் கட்ட தலைவர்கள் அந்த கட்சி தலைவரிடம் 5லிருந்து ஆரம்பிப்பார்கள். அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.  அந்த தலைவர் கோபித்துக்கொண்டு சென்றால் 2, 3 நாட்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தி விட்டு, பின்னர் ஜெயலலிதா பேச சொன்னார் என கூறி கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடித்து, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு வருவதுதான் அதிமுகவில் வழக்கமான நிகழ்வு.  திமுகவை எடுத்துக் கொண்டால், தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுவார்கள். கடந்த கால தேர்தல்களில் கருணாநிதி இப்படிப்பட்ட நடைமுறையை பின்பற்றினார். அதே வழியில் இப்போது திமுக தலைவராக  பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினும், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் இதே நடைமுறையைதான் பின்பற்றி வருகிறார்.

ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து, அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களின் நடை, உடை பாவனைகளே மாறிவிட்டது. அவர்களின் வாழ்க்கை தரம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சென்று விட்டதையே காட்டுவதாக சொல்லப்படுகிறது.  அதிமுக நிகழ்ச்சிகள் எல்லாம் நட்சத்திர ஓட்டல்களுக்கு மாறி வருவது பார்ப்பவர்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.  அந்த அளவுக்கு ஆடம்பர கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.  அதற்கு உதாரணம்தான், தற்போதைய கூட்டணி பேச்சுவார்த்தைகள். கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் இருந்து தற்போதைய சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நட்சத்திர ஓட்டல்களில் தான் நடக்கிறது.  சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக கருத்தரங்கம் நடத்தும் அளவிலான அறை ஒன்று தேர்தல் வரை நிரந்தரமாக புக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆடம்பரமாக இருக்கக்கூடிய இந்த அறையில்தான் தற்போது அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த அறையை வேறு யாருக்கும் வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளதாம். இதற்கான ஒருநாள் வாடகையே பல லட்சங்களை தாண்டும் என்கிறார்கள்.  சென்னை வந்த அமித்ஷா இந்த நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பாமகவுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தமும் இங்குதான் கையெழுத்தானது. அகில இந்திய பாஜ தலைவர்களுடனான பேச்சுவார்த்தையும் இங்குதான் நடந்து வருகிறதாம். இதனால் அதிமுக தலைவர்கள் இந்த ஓட்டலுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற நிலை உள்ளதாம்.  அங்கு செல்லும் அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்துகள் படைக்கப்படுகிறதாம்.

அனைத்து வகையான உணவு வகைகளும் பரிமாறப்படுகிறதாம். கிரில்டு லேப்ஸ்டார், கிரில்டு ஜம்போ பிரான், கிறிஸ்ப்பி டாய், சில்லி சிக்கன், தந்தூரி ஜிங்கா, மலபார் பிரைடு பிரான், மலபார் லேம்ப் பிரியாணி போன்ற வித்தியாசமான உணவுகளுக்கு எல்லாம் பில் பல ஆயிரங்களை தொடுமாம்.   இந்த விருந்துகள் எல்லாம் பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடிய கட்சியினருக்கு அல்ல. அதற்கு முன்பாக ஏற்பாடுகள் செய்ய செல்லும் முக்கிய நிர்வாகிகள், ஆலோசனை நடத்த கூடியவர்களுக்குதான் என்கிறார்கள். இதனால் எப்போதும் ஒரு கூட்டம் அங்கேயே முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக செல்வாக்காக (பணத்தில்) இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் நட்சத்திர ஓட்டல்களுக்கு மாறி இருக்கிறது. இது அதிமுகவினரின் கையில் காசு இருப்பதை காட்டுகிறதா அல்லது கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர மறுப்பதால் இப்படி மாற்று ஏற்பாட்டை அதிமுக செய்துள்ளதா என்பதும் கேள்விக்குறி.  

இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த கால தேர்தல்களில் கூறியிருக்கிறார். இதுபோன்ற தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர மாட்டார்கள் என்பதற்காக மாற்று ஏற்பாடாக பேச்சுவார்த்தையை நட்சத்திர ஓட்டல்களுக்கு மாற்றியிருக்கிறதாம். எது எப்படியோ, தலைமை அலுவலகத்தை மறந்து நட்சத்திர ஓட்டல்களில் பேச்சுவார்த்தை நடத்தும் புதிய கலாச்சாரத்தை அதிமுகவின் நீண்ட கால நிர்வாகிகளே விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்களாம். இது, அசுர வளர்ச்சியை காட்டுவதாக இல்லை. முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் வளர்ச்சியைத்தான் பிரபதிபலிக்கிறது என்பது அவர்களின் புலம்பலாக உள்ளது.

Related Stories: