நடிகை டாப்சி, காஷ்யப் வீடுகளில் ரெய்டு ரூ.650 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

சென்னை: நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகள் உட்பட முக்கிய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுமார் ₹650 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்ததாக கண்டுபிடித்துள்ளனர்.  நடிகை டாப்சி பன்னு, இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் ஆகியோர் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தனர். இந்த சூழ்நிலையில், நடிகை டாப்சி பன்னு, இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் பிரபலங்கள் வீடுகள், சினிமா நிறுவனங்களில் மும்பை மற்றும் புனேயில் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி ரெய்டு நடத்தினர். இதுபோல், டேலன்ட் ஏஜென்சீஸ் எக்சீட் என்டர்டெயின்மென்ட்டிலும் சோதனை நடந்தது. சோதனை நேற்றும் நீடித்தது.

 இந்த சோதனையில் சுமார் ₹650 கோடி வரி ஏய்ப்பு நடந்தது அம்பலம் ஆகியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகை டாப்சி வாட்ஸ் அப் உரையாடல்கள், மெயில்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவற்றை வருமான வரித்துறையினர் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். இதன்மூலம் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புனேவில் படப்பிடிப்பு நடத்தியது தொடர்பாகவும் டாப்சி, காஷ்யப் இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>