கெடுபிடி விதிகளால் கரகத்துக்கும் பிடிச்சது கிரகம்

தமிழகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் என்றாலே திருவிழா போலத்தான் இருக்கும். வீட்டு, தெருச்சுவர்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் வரையப்படும். வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான பேருடன் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பார்கள். கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தேர்தல் ஆணையம் சுவர் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சுவர் விளம்பரம் எழுதும் பெயிண்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், கட்சிப்பந்தல், தோரணங்கள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டது. பொதுக்கூட்ட மேடைகளில் மட்டுமே தோரணங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் கட்சித்தோரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் வார்டு வாரியாக வலம் வரும்போது, அவர்களுடன் ‘‘போடுங்கம்மா ஓட்டு’’ என்ற கோஷத்துடன் ஏராளமான தொண்டர்கள் உடன் வருவார்கள். இவர்களுக்காக சிறு உணவகங்களில் டீ, காபி, வடை, இட்லி போன்ற உணவுகள் வழங்கப்படும். இதன்மூலம் தொகுதி முழுவதும் உள்ள சிறு உணவகங்களுக்கும் வியாபாரம் களைகட்டும். தற்போது ஓட்டுக்கேட்க செல்வோர் 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளதால் சிறு உணவகங்களுக்கும் வியாபாரம் பாதித்துள்ளது. பிரசாரத்தின்போது வேட்பாளர்களுக்கு முன்பாக கரகாட்டக்காரர்கள் ஆடியபடி செல்வர். கரகாட்டக்காரர்களின் நக்கல், நையாண்டித்தனத்தை பார்க்கவே பொதுமக்கள் கூடுவர். அப்போது கட்சித்தொண்டர்களுடன் வரும் வேட்பாளர்கள், கூட்டத்தினர் மத்தியில் வாக்கு கேட்பது வாடிக்கையாக இருந்தது. தற்போது, ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கரகாட்டக்காரர்களும் புக்கிங் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>