திருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்

அண்ணாநகர்: திருமங்கலத்தில் ஒரு துணிக்கடையில் புடவை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு ஆண் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் எடிசன் (41). இவர், திருமங்கலம் 18-வது மெயின் ரோடு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது துணிக்கடைக்கு நேற்று மதியம் ஒரு காரில் 4 பெண்கள் வந்திறங்கினர். அவர்கள் கடைக்குள் நுழைந்து, திருமண நிகழ்ச்சிக்கு காஸ்ட்லி புடவைகள் வேண்டும் என கூறினர். பின்னர் அவர்கள் தனித்தனியே பிரிந்து, அங்கிருந்த புடவைகள், வேட்டி, சட்டைகள் எடுப்பது போல் நாடகமாடினர். அவர்கள் நேரம் கடத்துவதை அறிந்து எடிசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடைக்குள் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை எடிசன் ஆய்வு செய்தார். அதில், 3 பெண்கள் உள்பாவாடைக்குள் புடவைகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு எடிசன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வருவதை பார்த்ததும், ஒரு ஆண் உள்பட 3 பெண்கள் தப்பி ஓடிவிட்டனர். கடைக்குள் இருந்த அக்கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அப்பெண்ணை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அப்பெண் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா (50) என்பதும், இவர்மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புடவை திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் தேனி மாவட்டத்தில் இருந்து காரில் சென்னைக்கு வந்து பிரபல துணிக்கடைகளில் புடவைகள் திருடி சென்று விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.  இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், துணிக்கடையில் திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.

Related Stories:

>