யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து

போளூர்: ‘‘அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள்’’ என்று போளூரில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கி பேசியதாவது:- அதிமுகவை நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள். என் காரில் போன் உள்ளது. அதில் எந்தெந்த கட்சியில் இருந்து எவ்வளவு மிஸ்டு கால் இருக்கும் பாருங்கள். எந்தெந்த கட்சியில் இருந்து எவ்வளவு போன் கால் வந்துள்ளது என்று மாவட்ட செயலாளரிடம் காட்டிவிட்டு செல்கிறேன்.

அனைத்து கட்சியில் இருந்தும் நமக்கு அழைப்பு. கேப்டன் தலைமையில் கூட்டணி அமைத்தால் வருவதற்கு தயாராக இருக்கிறோம் என்கிறார்கள். இருந்தாலும் நம் கட்சியின் அங்கீகாரம், முரசு சின்னம் வேண்டுமென்றால் 8 இடங்களில் வெற்றிபெற வேண்டும். அதற்கு கூட்டணியில் இருக்க பேசுகிறோம். அவர்கள் நினைக்கிறார்கள். இங்குள்ள கட்சி பெரிய கட்சி என்று நினைக்கிறார்கள். 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கின்றனர். அப்போது மற்ற ஜாதி தேவையில்லையா? அது சும்மா, மீண்டும் தேமுதிக கூட்டணியுடன் யார் வெற்றி பெறுகிறார்களோ, அப்போது நாமே அனைத்து ஜாதியினருக்கும் வாங்கிக்கொடுப்போம்.

இரண்டு நாளில் கூட்டணியை கேப்டன் முடிவு செய்துவிடுவார். கேப்டன் சொல்லிவிட்டாரா, மூச்சு, உயிர் அனைத்தும் கொடுத்து செலவு செய்து ஜெயிக்க வைப்போம். என்னை பொறுத்தரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறுவது நம் கட்சிக்கு பெருமையல்ல. நகராட்சி, பேரூராட்சியில் இன்னும் தேர்தல் முடியவில்லை. உள்ளாட்சியில் தேமுதிகவில் நீங்கள் வெற்றி பெற ேவண்டும். சில ஒன்றிய செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறினர். அனைவரும் மாவட்ட செயலாளருடன் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். என்னிடம் இத்தனை சீட்டு உங்களுக்கு, ஒரு ராஜ்யசபா என்றார்கள். நான் அதற்கு ஆசை பட்டதே கிடையாது.

2009, 2014ம் ஆண்டே வாய்ப்பு வந்தது. கேப்டனை பொறுத்தவரையில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அதுதான் ஆசை. இவ்வாறு அவர் பேசினார். சுதீஷின் இந்த பேச்சால் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு கிடைப்பதிலும், கேட்ட தொகுதிகளை தருவதிலும் சிக்கல் எழுந்தது. அவரது இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி இருப்பதாலும் அதிமுக மூத்த தலைவர்களிடம் அதிருப்தி எழுந்துள்ளது.

Related Stories:

>