மதுரையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் சுருட்டல்: ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666; ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

மதுரை: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் தெருவிளக்கு மாற்றும் பணிகள் குறித்து சமூக ஆர்வலர் கார்த்திக் சில கேள்விகளை தொகுத்து மதுரை மாநகராட்சிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பி இருந்தார். சரியாக 71 நாட்களுக்குப் பிறகு மதுரை மாநகராட்சியில் இருந்து பதில் வந்துள்ளது. இந்த பதில் கடிதத்தில், தெருவிளக்குகள் குறித்து அவர்கள் கூறியிருக்கும் பதில் மிகுந்த அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதிப்பீடு செலவு சுமார் ரூ.1,000 கோடி. அதில் ரூ.30.25 கோடி தெருவிளக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 30,377 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எத்தனை விளக்குள் எரியும் நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதேநேரம், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தெருவிளக்கு பொருத்தும் பணிக்கு மதுரையின் 78 வார்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மொத்தம் நூறு வார்டுகளில், 78 வார்டுகளே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியோடு புதியதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு ஒரு தெருவிளக்கு கூட இத்திட்டத்தில் பொருத்தப்படவில்லை. இந்த தெருவிளக்குகள் வாங்குவதற்கு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன டீலருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.30 கோடிக்கு பொருட்கள் வாங்கும்போது, ஏன் மாநில அரசினால் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து இந்த பொருட்களை வாங்கி இருக்கக் கூடாது எனத்தெரியவில்லை. அதே போல் ஆர்டிஐயில் ஒவ்வொரு விளக்கினுடைய  விலை குறித்து கேட்டிருந்த கேள்விக்கு, மாநகராட்சி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. அதாவது, 20, 40, 60, 90, 120, 200 ஆகிய 6 வகையான வாட்ஸ்களில் தெருவிளக்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 20 வாட்ஸ் விளக்கு ஒன்றின் விலை மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்கள் சொல்வது ஒரு விளக்கு பொருத்தும் வரையிலான மொத்த செலவு ரூ.2304.50. இவர்கள் சொல்லும் திறனுள்ள எல்இடி விளக்குகளை வாங்கி, ஒரு விளக்கினை இரு வேலையாட்களைக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பொருத்தினால் கூட இவ்வளவு தொகை வராது, மேலும் இவர்கள் தெரிவிக்கும் தகவலில், பெரும் கொடுமை என்னவென்றால் மொத்தம் இவர்கள் சொல்லும் 30 ஆயிரம் விளக்குகளில், சுமார் 18,380 விளக்குகள் 20 வாட்ஸ் விளக்குகள் தான். அவர்கள் சொல்லும் அந்த தொகையின் அடிப்படையில் கணக்கிட்டாலும் கூட சுமார் ரூ.4.23 கோடிதான் வருகிறது. இது அவர்கள் சொல்லும் மொத்த விளக்குகளில் ஐந்தில் மூன்று பங்கு விளக்குகளுக்கான தொகையாகும்.

மீதம் உள்ள சுமார் 12 ஆயிரம் தெருவிளக்குகளுக்கு அவர்கள் கணக்கின்படி சுமார் ரூ.26 கோடியை செலவிட்டிருக்கிறார்கள். அதன்படி ஒரு விளக்கின் விலை சராசரி ரூ.21,666 ஆகும். இது மிகப்பெரிய கொள்ளை. நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.1,000 கோடி. அதில் வெறும் 3 சதவீதம் ரூ.30 கோடி. இதிலேயே ஆளுங்கட்சியினர் இந்த அளவிற்கு ஊழல் செய்திருந்தால், ஆயிரம் கோடியிலும் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சமூக ஆர்வலர் கார்த்திக் கூறும்போது, ‘‘‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சியோ, மக்கள் பிரதிநிதிகளோ இல்லாத நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படுவது மிக அவசியம். தமிழகத்தில் எங்கெல்லாம்  ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கிறதோ, அத்தனை இடங்களிலும் ஆய்வு செய்யப்படவேண்டும்’’’’ என்றார்.

Related Stories:

>