பாஜக தடாலடியால் கடும் அதிருப்தி: என்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டி?: முடிவை நாளை அறிவிக்கிறார் ரங்கசாமி.!!!

புதுச்சேரி: காங்கிரசை தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நட்சத்திரங்களையும் பாஜக தடாலடியாக இழுப்பதால் அதிருப்தியடைந்த ரங்கசாமி தனித்து போட்டியிடும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நாளை அவர்  முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார்.யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தாமரையை எப்படியாவது மலர வைக்க பாஜக தலைமை துடிக்கிறது. இதற்கு முன்னோட்டமாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ்  ஆட்சியை இழந்தது. இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பாஜக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நமச்சிவாயத்தில் துவங்கி ஒவ்வொருவராக வரிசையாக பாஜகவில் சங்கமித்தனர்.

காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில், மாஜி எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ஜான்குமார், அருள்முருகன், கல்யாணசுந்தரம், சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பி ராமலிங்கம், மகன் ரமேஷ் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா  முன்னிலையில் சேர்ந்தனர். குறிப்பாக என்.ஆர் காங்கிரசில் காலாப்பட்டு தொகுதியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கல்யாணசுந்தரமும் பாஜகவில் இணைந்தார்.காரைக்கால் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமித்ஷா, பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமையும் என தெரிவித்தது ரங்கசாமிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முன்னதாக முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென  ரங்கசாமி முன் வைத்ததையும் பாஜக ஏற்கவில்லை. தேர்தலுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்பதே பதிலாக இருந்தது.

அதோடு உள்துறை அமைச்சர் அமித்ஷா ரங்கசாமியிடம் போனில் பேசியுள்ளார். அப்போது 15 இடங்கள் மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ராஜ்யசபா, நியமன எம்எல்ஏக்கள் குறித்து முடிவு எடுக்க பாஜக தற்போது தயாராக இல்லை  என தெரிவித்துவிட்டனர். மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா 3 முறை ரங்கசாமியை சந்தித்து பேசியும் பலன் இல்லை. இதனால் பாஜக புதிய ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.ரங்கசாமி தனித்து களமிறங்கும் எண்ணத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட பாஜக, அடுத்ததாக என்.ஆர் காங்கிரசை கரைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவின் ஸ்பெஷல் தூண்டிலில் சிக்கிவிட்டதாக  தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் காங்கிரசின் எம்எல்ஏக்களை போல வரிசையாக என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவில் இணையலாம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகவலை கேள்விப்பட்ட ரங்கசமி அப்செட் ஆகிவிட்டார். தனித்து களமிறங்கி வெற்றி பெற்றாலும் தேர்தலுக்கு பிறகும் இதே ஆள்தூக்கும் வேலையில் பாஜக இறங்கினால் நிலைமை சிக்கல் ஆகிவிடும். இதனால் விரைவான முடிவை எடுக்க  முடியாமல் ரங்கசாமி மிரட்சியில் உள்ளார். இதற்கிடையே அரசியலில் எப்போதெல்லாம் முக்கிய முடிவு எடுக்கும்போது ரங்கசாமி வேட்டைக்காரன் புதூர் அழுக்குசாமியார், சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு  முடிவு எடுப்பார்.

பாஜக கூட்டணியில் தொடர்வாரா அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து நாளை முக்கிய முடிவை ரங்கசாமி எடுத்து அறிவிப்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. அதன்பிறகு அரசியல் களம் விறுவிறுப்பை  எட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதுஒருபுறமிருக்க அமமுக தரப்பில் இருந்தும் ரங்கசாமிக்கு தூது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கான செலவுகள் முழுமையும் பார்த்துக் கொள்கிறோம். அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்களை இழுத்து தனி அணியாக தேர்தலை  சந்திக்கலாம் எனவும் தூது விட்டுள்ளதால் ரங்கசாமி என்ன முடிவை எடுக்கப் போகிறார்? என்பதை புதுச்சேரி மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Related Stories:

>