மக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* புதுச்சேரியில் பாஜ தலைமையில் ஆட்சி அமையும் என்று அமித்ஷா திடீரென கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜ செய்திருப்பது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எந்தக் காரியமும் செய்ய விடவில்லை. தமிழகம் போன்று ரேஷன் கடைகளில் அரிசி போடுவதை புதுச்சேரியில் தடுத்தது மத்திய அரசு.  இடையில் முதல்வர் நாராயணசாமி சண்டை போட்டு மக்களுக்கு ரேஷன் கடையில் அரிசி வழங்கினார். அதையும் நிறுத்தி விட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் கடைசி நேரத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விலை வாங்கி, ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதையெல்லாம் கண் கூடாக பார்த்தவர்கள். அதனால் அமித்ஷா பேசியிருப்பது நடைமுறைக்கு வரும் என்பது சாத்தியமில்லை. இவ்வளவு அநியாயம் பண்ணினால் எப்படி வருபவார்கள். நல்லது பண்ணினால் தானே ஆட்சிக்கு வர முடியும். மக்கள் நலத்திட்டங்களை தடுத்தவர்களுக்கு எப்படி மக்கள் ஓட்டுப் போடுவார்கள்.

* தமிழ்நாட்டில் பீகார் பார்முலாவை கொண்டு வர அதிமுகவிடம் அதிக சீட் பெற பாஜ முயற்சி செய்கிறதா?

அதிமுக, பாஜவிற்கு 21 சீட் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலை கொடுத்திருக்கிருப்பதாக கூறுகின்றனர். அப்படியென்றால் பாஜவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து போகிறது என்று தான் அர்த்தம். தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லை. அப்படியிருப்பவர்களுக்கு அதிக சீட் கொடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம். பாஜவிற்கு பயந்து போய் அவர்கள் கேட்ட தொகுதிகளையெல்லாம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அடிமை ஆட்சி நடத்தினார்கள், இப்போது அடிமையாக கட்சி நடத்துகிறார்கள்.

* சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி சாத்தியமா?

மூன்றாவது அணி, நான்காவது அணி என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம். யாரையும் நிற்க கூடாது என்றும், நிற்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. மக்கள் மூன்றாவது அணிக்கு வாக்களிப்பார்களா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும்.

* வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவிப்பு பற்றி?

வன்னியர்களுக்கு ஏற்கனவே 20 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உள்ளது. இப்போது உள்ஒதுக்கீடு என்று அவர்களுக்கு புதிதாக அதில் பங்கு போட்டுள்ளனர். வேறு ஒன்றும் புதிதாக எதுவும் இல்லை. இதனால் வன்னியர்களுக்கு கூடுதலாக சலுகை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பது மாதிரி தெரியவில்லை. ஏற்கனவே 20 சதவீதம் ஒதுக்கீட்டிற்குள் என்ன பயன் பெற்றார்களோ அதை தான் பெறப்போகின்றனர். கூடுதலாக எதையும் பெறுவதாக தெரியவில்லை. இது எதற்காக என்றால் தேர்தலுக்காக தான். கூட்டணிக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான், ஏற்கனவே வன்னியர்களுக்கும், சீர்மரபினருக்கு இருக்கிற ஒதுக்கீடு தான், புதிதாக என்ன வரும் என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் வன்னியர் மக்களுக்கும், சீர்மரபினருக்கும் பெரிதாக இதுவரை கிடைக்காத சலுகைகள் கிடைத்து விடும் என்று சொல்வதற்கான வாயப்புகள் மிக குறைவு ஆகும்.

Related Stories:

>