அதிமுக ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் பெரிய அளவில் பாதிப்பு: -கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக்

* கோவையில் அதிமுகவை எதிர்த்து தனி ஆளாக நீங்கள் நடத்திய போராட்டங்களால் மாறுதல் ஏற்பட்டதா? 2016ல் சட்டப்பேரவை தேர்தல் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அன்று முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான போராட்டங்களை திமுக சார்பிலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பிலும் நடத்தியுள்ளேன். அதில், ஒரு  பன்னாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி மக்களுக்கு விரோதமான ஒரு ஒப்பந்தத்தை கோவை மாநகராட்சி கொடுத்தது. இதை எதிர்த்து நடத்திய போராட்டம் மிகவும் முக்கியமானது. கோவை மாநகராட்சியில்  2017ல் இருந்து மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு நிறைவேட்டப்பட்ட 6 ஆயிரம் தீர்மானங்கள் மறைக்கப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேலான தொகை இப்பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. வேலுமணிக்கும் அவருடைய பினாமிகளுக்கும்  ஒப்பந்தம் வாங்கப்பட்டது. இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அதற்காக போராட்டம் நடத்தியிருக்கிறோம்.

* கோவையில் கடந்த 10 ஆண்டில் தொழில் வளர்ச்சி எப்படி இருந்தது?

கோவையில் உள்ள மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டது. 3 முக்கிய மேம்பாலப்பணிகளை முடிக்க பல கட்ட போராட்டங்களை நடத்தியபோது அதை இந்த அரசு முடிக்கவில்லை. தொழில் வளர்ச்சிக்காக சர்வதேச விமான  போக்குவரத்து என்பது கோவை மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமானது. அதற்காக 2010ல் கலைஞர் விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்தார். கடந்த 10 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்த  மக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை தரப்படவில்லை. விரிவாக்கமும் செய்யவில்லை. இதனால், தொழில்வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய, மாநில அரசு ரூ.998 கோடி ஒதுக்கி, வேலை  நடைபெறுவதாக கோவை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், தரமற்ற கட்டுமானப்பொருட்கள் கொண்டு இந்த திட்டப்பணிகள் நடைபெறுகிறது. நிதி கையாளுவதில் எஸ்.பி.வேலுமணி சகோதரர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான்  நடைபெறுகிறது.

* உங்கள் போராட்டத்தின் வாயிலாக சட்டமன்ற தேர்தலில் மக்களின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும்?

கோவை மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்களின் போராட்டத்தின் வெளிப்பாடு மக்களிடம் சரியான முறையில் சென்றுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை. சிறு, குறு  தொழில்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.  

* கோவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது?

எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சராக மக்கள் யாரும் பார்க்கவில்லை. ஆளுமை திறனற்ற ஒரு முதல்வரை கோவை மக்கள் விரும்பவில்லை. தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதால் ஒரு  நேர்மையான முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ய வேண்டும் என்பதே கோவை மக்களின் எண்ணமாக உள்ளது.

Related Stories:

>