பாஜவின் அடிமையாக அதிமுக அரசு செயல்படுகிறது: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

திண்டுக்கல்:  பாஜவின் அடிமையாக அதிமுக அரசு செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார துவக்க மாநாடு நேற்று நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, காமராஜ், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது: தமிழகத்தில் பாஜவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அதனால், அதிமுகவை கருவியாக பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. பாஜ நேரடியாக மோத முடியாது என்பதால் அதிமுகவின் பின்னால் இருந்து தேர்தலை சந்திக்கிறது. பாஜவின்  அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது. சுயமாக அதிமுக அரசு நடத்தவில்லை.

இந்தியாவை ஒரே கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. இந்தியாவில் குடியரசை மாற்ற நினைக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பாக கருத்து தெரிவித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பாஜ செயல்படுகிறது. மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்காக செயல்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இவ்வாறு அவர் பேசினார்

Related Stories: