தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது : அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்

மதுரை -தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை அமலுக்கு வந்தவுடன், மதுரை மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் படங்களை  அதிகாரிகள் அகற்றினர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்கி 19ம் தேதியுடன் முடிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று  மாலை அறிவித்தது. அறிவிப்பு வந்த மறுநிமிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்கள் உடனுக்குடன்  அகற்றப்பட்டன. இதேபோன்று பல அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் படத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டன.

அதேபோன்று தற்போதைய எம்.எல்.ஏவின் தொகுதி அலுவலகத்தை அனைத்து எம்.எல்.ஏவும் காலி செய்து அதனை பூட்டி சாவியை சம்பந்தப்பட்ட பகுதி தாசில்தார் வசம் ஒப்படைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலகத்தையோ, அரசு வாகனத்தையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசு  வாகனங்கள் அனைத்தும், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

Related Stories:

>