அதிகாரிகள் ஆய்வு செய்தும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாதது ஏன்?

*விவசாயிகள் கேள்வி

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், காட்டூர், மகேந்திரப்பள்ளி, அளக்குடி, முதலைமேடு, நாணல்படுகை, திட்டு படுகை, சந்தபடுகை, குத்தவக்கரை, சரஸ்வதி வளாகம், கீரங்குடி, கொன்னகாட்டு படுகை, மாதிரவேளூர், பாலுரான்படுகை, சிதம்பரநாதபுரம், சோதியகுடி, பனங்காட்டான்குடி, வடரங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் கடந்த ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர் நல்லநீராக இருந்தது. இதனால் நெல், உளுந்து, பயறு, வாழை, மணிலா, வெங்காயம், கரும்பு, கத்தரி, வெண்டை, தக்காளி மற்றும் மல்லி பூ, செண்டி பூ, காக்கட்டான், மல்லி, முல்லை உள்ளிட்ட பலவகையான பூக்களை சாகுபடி செய்திருந்தனர். இதன்மூலம் விவசாயிகள் மற்றும் தோட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் லாபமடைந்து வந்தனர்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதால் அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் அதலபாதாளத்துக்கு பள்ளம் ஏற்பட்டு கடல்நீர் எளிதில் புகுந்து விட்டது. கொள்ளிடம் ஆற்றில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் புகுந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைத்து பயிர்களையும் சாகுபடி செய்யாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி நிறுத்தப்பட்டது. ஆனால் உப்புநீர் அனைத்து இடங்களையும் சூழ்ந்துள்ளது. நிலத்தடி நீர் முழுவதும் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்து வந்த 5,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 300 ஏக்கரில் தோட்டப்பயிர் சாகுபடி நிறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே சந்தபடுகை என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதாக அறிவித்து ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகள் குறிப்பிட்டு ஆய்வு செய்த இடத்தில் இதுவரை கதவணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திமுக ஒன்றிய பணிக்குழு பொறுப்பாளரான அங்குதான் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக அரசு தெரிவித்து பலமுறை ஆய்வு செய்தது. ஆனால் தடுப்பணை அல்லது கதவணை கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஆற்றின் நீர் உப்புநீராக மாறி நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. எனவே மக்களின் நலன் கருதி உடனடியாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>