பின்தங்கிய மக்களை முன்னேற்றவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடெல்லி: ‘பின்தங்கிய சமூகத்தினரை முன்னேற்றவே, தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை செய்யப்பட்டுள்ளது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சென்னையை சேந்த தினேஷ் என்ற மாணவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல விவகாரங்களில் இதர பிரிவை (ஓசி) சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீடு முறைகளில் மத்திய அரசு தலையிடாது,’ என தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசும் நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.

அதில், ‘தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுத்த பின்னர்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, பின் தங்கிய சமூகத்தினரை முன்னேற்ற வேண்டும் எனபதற்காகதான் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இதற்கு எதிரான அனைத்து மனுக்களையும்  தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: