‘இப்போ இல்லன்னா எப்போவும் இல்ல’ அதிமுகவில் வாரிசுகளுக்கு சீட்

அதிமுக தலைவர்களின் வாரிசுகள் இப்போது களம் இறங்க தயாராகி வருகிறார்களாம். இதற்காக தொகுதிகளையும் தயாராக வைத்துள்ளார்களாம். இது கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலத்தில் வாரிசு அரசியலை கட்சிக்குள் சேர்க்காமல் இருந்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை குறை சொல்லிக்கொண்டே, தன்னுடைய கட்சியில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு எம்பி சீட் கொடுத்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு கட்சியில் பதவி வழங்கினார். அதன்பின்னர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியில் வாரிசு அரசியலுக்கு தடை இல்லாமல் அனைவரும் இறக்கிவிட ஆரம்பித்து விட்டனர்.

அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய மகன் ரவீந்திரநாத்துக்கு எம்பி சீட் வாங்கிக் கொடுத்தார். மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மகன் எம்பி சீட்டில் நின்று தோற்றார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் தலைவர்களின் வாரிசுகள் மொத்தமாக களம் இறங்க உள்ளனர். அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப், இந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று கூறுகிறாராம். இதனால் அவருக்கான தொகுதியும் ரெடியாகிவிட்டதாம். அதேபோல, கே.பி.முனுசாமியின் மகனும், இந்த தேர்தலில் போட்டியிட உள்ளாராம். இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டாராம். திண்டுக்கல்லைச் சேர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகனும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இதற்காக உங்களுக்கு சீட் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு சீட் வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறிவிட்டாராம்.

மதுரையைச் சேர்ந்த ராஜன் செல்லப்பாவும், தனக்கும் தனது மகனுக்கும் சீட் வேண்டும் என்று கூறி வருகிறாராம். திருச்சியில் வெல்லமண்டி நடராஜனும் தனது வாரிசை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் தங்களது வாரிசுகளை இறக்க முடிவு செய்துள்ளார்களாம். இந்த தேர்தலில்தான் ஆளும் கட்சி என்ற முறையில் அதிகாரம், பண பலத்துடன் தேர்தலில் நிற்க முடியும். அதேநேரத்தில் வீக்கான தலைமையும் இருக்கிறது. தேர்தலில் சீட் கிடைத்தால் போதும். தேர்தல் செலவுக்கு கொடுக்கும் பணத்தையும் சுருட்டி விடலாம் என்றும் கருதுகிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வாய்ப்பு வாரிசுகளுக்கு வராது என்று தலைவர்களும், வாரிசுகளும் கருதுகிறார்களாம். இதனால்தான் வழிகாட்டு குழு மற்றும் மூத்த தலைவர்களை இரண்டாம் கட்டத் தலைவர்கள் வட்டமடித்து வருகிறார்களாம்.

* சுயேட்சைகளை ஜெயிச்ச நோட்டா

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றார். அதே வேளையில் பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகள் மட்டுமே பெற்றார். மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றிருந்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 59.83 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு கிடைத்தது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மொத்த வாக்குகளில் 35.04 சதவீதம் மட்டுமே கிடைத்தது. நாம் தமிழர் கட்சிக்கு 1.63 சதவீத வாக்குகள் பதிவானது. அமமுக வேட்பாளர் லெட்சுமணன் 1.18 சதவீத வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யத்துக்கு 0.82 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன. சுயேட்சை வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. மொத்தம் 6131 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தன. இதில் 43 தபால் ஓட்டுகள் ஆகும். தபாலில் வாக்களித்தவர்களும் நோட்டாவை விரும்பியிருந்தனர்.

Related Stories: