தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியது: இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

சென்னை:  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். அதேபோல அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பாஜ சார்பில் அமித்ஷா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தர் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இந்நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ேபச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரசுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான உம்மன்சாண்டி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. பேச்சு வார்த்தைக்கு பிறகு கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ‘‘திமுக தலைவர்களோடு கூட்டணி தொடர்பாக பேசினோம். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக இருந்தது. இரு தரப்பிலும் அவரவர் கருத்தை பகிர்ந்துள்ளோம். இது குறித்து இரண்டு தரப்புமே தங்கள் கட்சி மேலிடத்தில் கலந்து பேசி அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு செல்வோம்’’ என்றார். தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவுடன் நடத்தப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: