காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் தொடக்கம்

சென்னை: காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 650 பேர் விண்ணப்பங்களை வாங்கினர். தமிழகத்தில் பேரவை தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்ப மனு வாங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். இந்த மனுக்கள் மார்ச் 5ம்தேதி வரை பெறப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டது. பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்று நன்கொடை கட்டணத்துடன் பூர்த்தி செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்சியினர் தங்களுக்கான தொகுதிகளில் போட்டியிடும் வகையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கான விருப்ப மனுக்களை அளித்தனர். மாவட்ட தலைவர்களை பொறுத்தவரை, ஆர்.கே.நகர்., ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மனு தாக்கல் செய்தார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். இதேபோன்று பல்வேறு மாவட்ட தலைவர்களும் நிர்வாகிகள் என நேற்று மட்டும் மொத்தம் 650 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதில் 50 பேர் மனுக்களை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். இதனால் சத்தியமூர்த்திபவன் களை கட்டியது.

Related Stories: