கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு; பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி, அவர் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா நோய் பரவ காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவ மாணவிகள் வீடுகளிலிருந்து கல்வி கற்றனர்.

இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  ரத்து செய்யப்பட்டன. 11ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளும் ரத்து  செய்யப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து 10, 12ம் வகுப்பு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்ததால், பாடத்திட்டங்களை குறைத்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்த சூழ்நிலையில் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளை பள்ளிகல்வித் துறை மேற்கொண்டு வந்தது. இதை தொடர்நது, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மே 3 ம்தேதி தொடங்கி 21ம்தேதி வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு குறித்த சரியான தகவல் எதையும் அறிவிக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முடிந்த உடன் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக சட்டப் பேரைவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றொரு அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது, 58லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும். இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

* இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்

தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பணப்பலன்கள் ரூ.50 லட்சம் வரை அரசு வழங்க வேண்டி வரும். அரசின் கஜானா காலியாக இருப்பதால் ஓய்வு பெறுவதற்கான வயது 59 ஆக உயர்த்தியதாக காரணம் சொல்லப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பதவி உயர்வு உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் பதவி உயர்வு பாதிக்கும். மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

Related Stories: