வீட்டில் வைத்து பூஜை செய்தால் பணம் கொட்டும் என்று கூறி ‘ரைஸ் புல்லிங்’ தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் நூதன மோசடி: சினிமா போட்டோகிராபரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: திரைப்படத்தில் வருவது போல் பழங்கால கோயில் கலசங்கள் (ரைஸ் புல்லிங்) இருப்பதாக கூறி பலரிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மோசடி செய்த சினிமா போட்டோகிராபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியை சேர்ந்தவர் நியூட்டன் (44). சினிமா போட்டோகிராபரான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். ஆயிரம்விளக்கு பகுதியில் போட்டோ ஸ்டூடியோவும் நடத்தி வந்தார். பின்னர், கொரோனா காலத்தில் வேலை இல்லாததால், போட்டோ ஸ்டூடியோவை மூடிவிட்டு, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, திருமுல்லைவாயல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி காலை அலுவலகத்திற்கு சென்ற நியூட்டன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதற்கிடையே நியூட்டன் தனது மாமனாருக்கு போன் செய்து, ‘என்னை சிலர் கடத்தி வைத்துள்ளனர். அவசரமாக ரூ.30 லட்சம் வேண்டும். இல்லையென்றால், என்னை கொலை செய்துவிடுவார்கள்,’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நியூட்டனின் மாமனார் சம்பவம் குறித்து தனது மகள் கவுசல்யாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கவுசல்யா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார், நியூட்டன் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். அதில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருப்பதாக டவர் காட்டியது. உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, நியூட்டனை 6 பேர் ஒரு அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. உடனே போலீசார் நியூட்டனை கடத்திய சுரேஷ் (38), சுனில் (32), திலீப் (30), விக்கி (எ) விக்னேஷ் (22), சதீஷ் (34), கவுதம் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கைது செய்யப்பட்ட 6 பேர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நியூட்டன் மேற்கண்ட 5 பேருக்கு பழக்கமாகியுள்ளார். அப்போது, நியூட்டன் தன்னிடம் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் (ரைஸ் புல்லிங்) இருப்பதாகவும், இதை வெளிநாட்டு புரோக்கர்களிடம் விற்பனை செய்தால் எனக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தற்போது பணத் தேவை இருப்பதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். மேலும், சினிமா காட்சி போல், என்னிடம் உள்ள ரைஸ் புல்லிங்கை வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து பூஜை செய்தால் பணம் கொட்டும். நினைத்த காரியங்கள் எல்லம் உடனே கைகூடும். தொழில் எதிரிகள் எல்லாம் உங்களிடம் வந்துவிடுவார்கள் என்று நியூட்டன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இது உங்களுக்கு வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இது அரியவகை என்பதால், பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், என்று கூறியுள்ளார். அதை நம்பிய 6 பேரும், தனித்தனியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதாவது ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் நியூட்டன் ‘ரைஸ் புல்லிங்’ கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த 6 பேரும் நியூட்டனை கடத்தி கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க சொல்லி மிரட்டியது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தொழிலதிபர்களிடம் கைவரிசை

சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தித்த நியூட்டன், தன்னிடம் அரிய வகை கோபுர கலசங்கள் (ரைஸ் புல்லிங்) இருப்பதாகவும், பல லட்சம் மதிப்புள்ள அவற்றை குறைந்த விலையில் உங்களுக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் முன்பணம் கொடுத்துள்ளனர். அதன்படி, ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெற்று, நூதன மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: