கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசு ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம்: கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பின பசு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம், தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில், ரூ.118 கோடியில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் அதைச் சார்ந்த நிர்வாக கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. இவற்றை திறந்து வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: வெளிநாட்டில் உள்ள பண்ணையில் கலப்பின பசுக்கள் ஒருநாளைக்கு 65 லிட்டர் பால் கொடுக்கிறது.

அதேபோல், தமிழகத்திலும் ஒரு நாளைக்கு 35 முதல் 45 லிட்டர் வரை பால் தரக்கூடிய கலப்பின பசுக்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இத்தகைய கலப்பின பசுக்களை உருவாக்குவதற்காக, கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.  இதன்மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கிடாரி அல்லது பசுங்கன்று, நவீன விஞ்ஞான முறைப்படி இனப்பெருக்கம் செய்து கொடுக்க உள்ளோம். இத்திட்டத்தை ₹46 கோடியில் ஊட்டியில்  உருவாக்க நினைத்தோம். ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தால், அது தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பை பெற்று, அந்த திட்டமும் தொடங்க இருக்கிறது. புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு, பூலாம்பட்டியில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, ரூ.260 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தலைவாசலை புதிய தாலுகாவாக அறிவித்துள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மாவட்டம் முழுவதும் ரூ.125.54 கோடியில் முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். புதிதாக ரூ.181.15 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.844.05 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு அமைக்கப்பட்ட நாட்டின கால்நடைகளின்  கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். விழாவுக்கு தலைமை வகித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு திறன் அதிகரித்துள்ளது. தலைவாசல், உடுமலைப்பேட்டை மற்றும் தேனி ஆகிய 3 புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையும் நடப்பாண்டே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் 1,110 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்’’என்றார்.

* உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு பூமி பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுவதற்கு 4 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பெருமாள் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சம்பத், அறங்காவல் குழு உறுப்பினர் குமரகுரு எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் எடுத்து கொடுத்து பயபக்தியுடன் வழிபட்டார். முன்னதாக 70க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் மற்றும் கல்வெட்டு திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

Related Stories: