மும்பை ஓட்டலில் பரபரப்பு மக்களவை எம்பி மர்ம மரணம்: தற்கொலை கடிதம் கிடைத்ததாக போலீஸ் தகவல்

மும்பை: தாதர்-நாகர் ஹவேளியை சேர்ந்த மக்களவை சுயேச்சை எம்பி மோகன் டெல்கர், மும்பை ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தங்கியிருந்த அறையில் இருந்து  தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாதர்-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை எம்பி மோகன் டெல்கர் (வயது 58). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள கடற்கரையை ஒட்டிய நட்சத்திர ஓட்டலில் மோகன் டெல்கர் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து, மோகன் டெல்கரினை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில் குஜராத்தியில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், பிரேத பரிசோதனைகள் முடிவுகள் வெளியான பின்னரே இது தற்கொலை என்பது உறுதி  செய்யப்படும். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பழங்குடியின மக்களின் வழக்கறிஞராகத் வாழ்க்கையைத் தொடங்கியவர் மோகன் டெல்கர். சில்வாசாவில் வர்த்தக அணி தலைவராகவும் இருந்தார்.  தற்போது, நாடாளுமன்ற உள்துறை அமைச்சக விவகாரங்கள் துறையின் நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். ஏற்கனவே தாத்ரா-நாகர் ஹவேலி தொகுதிகளில் 6 முறை வென்று நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார். தற்போது 7வது  முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு பாஜ, காங்கிரஸ் கட்சிகளில் இணைந்தும் செயல்பட்ட இவர், தற்போது சுயேச்சை எம்பியாக உள்ளார்.

Related Stories: