ஆட்சியை தக்க வைக்க அதிமுக எம்எல்ஏ ஒவ்வொருத்தரையும் பிடிச்சு வச்சி கூவத்தூரில் பட்டபாடு பெரியபாடு : அமைச்சர் கடம்பூர் ராஜூ உடைத்த ரகசியம்

தூத்துக்குடி : ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியை தக்க வைக்க அதிமுக எம்எல்ஏ ஒவ்வொருவரையும் பிடித்து வைத்து கூவத்தூரில் பட்ட பாடு பெரிய பாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இந்த ஆட்சி நீடிக்குமா, தாங்குமா என்ற எண்ணம் மக்களை போன்று தங்களுக்கும் இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைக்க கூவத்தூரில் படாதபாடு பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தப்பித்தேன், பிழைத்தேன் என குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்து கூட பார்த்ததில்லை என தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பதவி தரப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,தேர்தலுக்குப் பிறகுதான் இந்த ஆட்சி ஒரு நிலையான ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் பழனிசாமியை  தான் பாராட்ட வேண்டும். .எல்லா பிரச்சினைகளையும் அவர் சமாளிக்க கூடியவராக இருந்தார். அதற்கான அறிவும் ,ஆற்றலும் அவரிடம் உள்ளது.நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் .நேரம் ,காலத்தை  நம்பக்கூடியவன். மக்களால் எந்த குற்றத்தையும் சொல்லமுடியாத அளவுக்கு திறமையான எளிமையான முதல்வரை  பெற்றுள்ளோம்,என்றார்.

Related Stories: