நள்ளிரவில் திரைப்பட பாணியில் செயின் பறித்த ஆசாமிகளை விரட்டி பிடித்த போலீசார்: விமான நிலையத்தில் பரபரப்பு

மீனம்பாக்கம்: விருகம்பாக்கத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆண்ட்ரூஸ் (23) நேற்று முன்தினம் நள்ளிரவு பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில்  பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர், கத்தி முனையில் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் ஜிஎஸ்டி சாலை நோக்கி தப்பி சென்றனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த ஆண்ட்ரூஸ், கொள்ளையர்களின் பைக் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். மேலும், அவர்களை பின் தாடர்ந்து பைக்கில் சென்றார். காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதுபற்றி ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரல், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரும், பைக்கில் சென்ற 3 மர்ம நபர்களை துரத்தி சென்றனர். இதை அறிந்ததும் ஒரே பைக்கில் சென்ற 3 பேரும், மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்துக்குள் நுழைந்த

னர். அங்கு விமான நிலைய நிர்வாக அலுவலகம் அருகே சென்று, அங்குள்ள ஊழியர்கள் குடியிருப்பு வழியாக மீண்டும் ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல 3 மர்ம நபர்களும் முயன்றனர். ஆனால், விமான நிலைய வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகார்டு மீது அவர்களின் பைக் மோதியதால், 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த மழைநீர் கால்வாய்க்குள் விழுந்தனர்.

உடனே, போலீசார் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சேர்ந்து, கால்வாய்க்குள் விழுந்த 3 மர்ம நபர்களையும் பிடித்து மீனம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (29), தேவன் (25), இம்ரான் (28) என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை சவரன் சங்கிலி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமாவைப்போல் செயின் பறிப்பு ஆசாமியை விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: